சென்னை: ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகள் பழமையான நூற்பாலை எந்திரங்களை மேம்படுத்துவதற்காக, கடனுக்கான 6 சதவீத வட்டி மானிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக சட்டசபையில், 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தன.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், நூற்பாலை தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கான முதலீடு செய்ய வேண்டியது, தவிர்க்க முடியாததாக உள்ளது. அதன் மூலம் தேசிய அளவில் தமிழகம் முன்னிலை பெற வாய்ப்பு ஏற்படும். இந்த நோக்கத்தின் அடிப்படையில், நவீன தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக சிறப்புத் திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்ய உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்பு தொடர்பான அரசாணையை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை வெளியிட்டுள்ளது. அதில், 15 ஆண்டுகள் பழமையான நூற்பாலை எந்திரங்களை மேம்படுத்துவதற்காக, கடனுக்கான 6 சதவீத வட்டி மானிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியாண்டுக்காக மட்டும் ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது.
அதில், 60 சதவீத நிதி, ‘ரிங் பிரேம் ஸ்பின்னிங் மில்’களுக்கு வழங்கப்படும். 15 சதவீதம், ‘ஏர்ஜெட்’ அல்லது ‘எலக்ட்ரோ ஸ்பின்னிங்’கிற்காகவும், மீதமுள்ள 25 சதவீத நிதி, ‘ஓபன்-எண்ட் ஸ்பின்னிங் ரோட்டார் கிட்’களை நவீனப்படுத்த வழங்கப்படும். 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பழமையான சுழல் மற்றும் சுழலிகளில் உள்ள எந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவையாகும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 4.60 கோடி நூற்பு எந்திரங்கள் (ஸ்பின்டில்) இயக்கத்தில் உள்ளன. அவற்றில் 1.90 கோடி எந்திரங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் 1.20 கோடி எந்திரங்கள் 15 ஆண்டுகள் பழமையானவை. மற்ற மாநிலங்கள் அங்குள்ள நூற்பாலைகளுக்கு வழங்கும் பெரிய அளவிலான சலுகைகளால், தமிழகத்தில் ஜவுளித் தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறைந்த அளவிலான தேவை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்றவை, ஜவுளி சந்தை மந்தமானதற்கு காரணங்களாக உள்ளன.
ஆனால் இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஜவுளித் தொழில் சிறந்து விளங்க வாய்ப்பு உருவாகும் என்று அந்தத் தொழிலைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில், இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இந்தத் தொழில் மூலம் ரூ.75 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.