பஞ்சபூதத் தலங்களுள் திருவண்ணாமலை திருத்தலமும் ஒன்று. இது அக்னி தலம் ஆகும். கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் திருவண்ணாமலையில் பிறந்தன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்டது இந்த ஆலயம்.

இதோ… கார்த்திகை தீபம் வழிபடும் முறை இதுதான்…
ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள், ஆறு பிரகாரங்களும் உள்ளன. 142 சன்னதிகள், 22 விநாயகர் சிலைகள், 306 மண்டபங்கள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் அதனடிப்படையில் பாதாள லிங்கம், 43 செப்பு சிலைகள், கல்யாண மண்டபம் ஆகியன அமைந்துள்ளன.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கமும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. கால பைரவர் சன்னதி உண்டு.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப் போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலையார் கோவிலில் பேய் கோபுரத்துக்கு வலதுபுரத்தில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.

அடி முடி காணாத பரம்பொருளின் பாத தரிசனம் காண்பதற்காக அடியார்களும், அருளாளர்களும் கடும் தவம் மேற்கொண்டனர். அதன் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்திருக்கிறது இந்த திருப்பாதம். இது தனி சந்நிதியாக உள்ளது. இதை போல் தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்திலும் பாத தரிசனத்தை நாம் காணலாம்.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
