தமிழக சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று சாபாநாயகர் அப்பாவு தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கும் முன்வரிசையில் துரைமுருகன் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துறை வாரியாகவும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் சட்டசபையில் கேள்வி பதில் விவாதம் நடைபெற்றது.
அதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் பாபு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் 2018 தீவிபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டபம் புனரமைப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துக் கூறியதாவது,
2018-ல் நடைபெற்ற தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டபத்தினை புனரமைக்க கடந்த ஆட்சியில் குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், வீர வசந்தராயர் மண்டபத்திற்கு கற்தூண்கள் சுமார் 25 அடி அளவில் தேவைப்படுகிறது. இதற்குத் தேவைப்படும் கற்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஒரு நாளைக்கு 200 கோடி கலெக்ஷன்.. 1000 கோடியை நோக்கி வசூல் வேட்டை நடத்தும் புஷ்பா 2
மேலும் அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி தற்போது கற்கள் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 19 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து ஒவ்வொரு இந்து சமய அறநிலையத் துறை கூட்டத்தின் போதும் முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. விரைவில் இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறும்.
மீனாட்சி அம்மன் கோவிலைப் பொறுத்தவரை 63 பணிகளில் 40 பணிகள் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள 23 பணிகளை முடித்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிச்சயமாக குடமுழுக்கு நடத்தப்படும்” என்று அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் தெரிவித்தார்.
மேலும் செல்லூர் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலின் துணைக்கோவிலான அய்யனார் கோவில் கும்பாபிஷேகமும் விரைவில் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.