கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்
சென்னை: நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருள் கிடைக்கும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார்.
திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். தினம் தினம் மாலை வேளையில் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.
தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.
மாலை நேரத்தில் 4.30 மணி முதவ் 6 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ நேரம் சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.