திருவண்ணாமலை நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை ஆண்டவர்.. அகல்விளக்கு பூஜை

By Subbu Lakshmi

Published:

திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் அகல் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கும் திருவண்ணாமலை நிலச்சரிவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை ஆண்டவர் என்றும் திருப்பூர்வாசிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள புகழ்பெற்ற ஆலயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளும், பிற நாடுகளிலும் கோவில்கள் பல இருந்தாலும், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சிறிது வேறுபட்டதாகும்.

ஆண்டவர் கோவிலில் உள்ள உத்தரவுப் பெட்டி தான் சிறப்புக்கு காரணம். சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருளைப் பொறுத்து தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் அதன் தாக்கம் இருக்கும் என்பது இன்று வரை நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் கனவில் இதுவரை மண், துப்பாக்கி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை. கணக்கு நோட்டு, பூமாலை, மகாலட்சுமி சிலை, மஞ்சள் தாலி, வேல் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன. உத்தரவு பெட்டியில் தண்ணீர் வைத்து பூஜை செய்த போது நாட்டில் எப்போதுமே வராத சுனாமி வந்தது. அதே போல இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்த போல சசிகலா உட்பட பல அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் சின்னாண்டகோயிலை சேர்ந்த தணிகைநாதனின் (33) கனவில் மண் விளக்கு வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்தது. அதன்படி கடந்த நவம்பர் 12 ஆம் தேதி முதல் மண் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வு முன்னேறும். அவர்களுடைய தொழில் விருத்தியாகும் என சொல்லப்பட்டது.

அது தவிர தற்போது வேறு ஒரு தகவலும் பகிரப்பட்டு வருகிறது. அண்மையில் பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் வரலாறு மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் மண்ணுக்குள் புதைந்து சடலமாக மீட்கப்பட்ட துயர சம்பவம் நடந்தது. அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையில், நிலச்சரிவு ஏற்படப்போவதை சிவன்மலை ஆண்டவர் முன்பே கணித்ததாகவும் அதன் காரணமாகவே அகல் விளக்கு வைத்து பூஜை செய்யப்பட்டதாகவும் தற்போது செய்தி பரவி வருகிறது.