டிசம்பர் மாதம் என வந்து விட்டாலே அந்த ஒரு வருடத்திற்குள் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை ஒரு தொகுப்பாக பல ஊடகங்களும், சமூக வலைதள பக்கங்களும் வெளியிட்டு மக்கள் மத்தியில் ஒரு வித ரீவைண்ட்டை கொண்டு வரும். ஒரு பக்கம் டாப் 10 செய்திகள், டாப் 10 சம்பவங்கள் என சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகும் சூழலில் இன்னொரு பக்கம் மக்கள் அதிகம் ரசிக்கும் கிரிக்கெட், சினிமா உள்ளிட்டவற்றில் சிறந்த விஷயங்கள் பற்றிய செய்தி தொகுப்புகள் அதிக கவனம் பெறும்.
2024 ஆம் ஆண்டில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர், அதிக ரன் சேர்த்த பேட்ஸ்மேன், சுவாரசியமான கிரிக்கெட் நிகழ்வுகள் என விளையாட்டு பற்றி ஒரு பக்கமும், இன்னொரு புறம் சிறந்த பாடல்கள், இந்த திரைப்படங்கள் அதிக வசூலை அள்ளிய படங்கள் என நிறைய விஷயங்களும் பகிரப்படும்.
அந்த வகையில் சமீபத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் தொடர்பாக போர்க்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றாலே வெளிநாடுகளுக்கு ஹிந்தி சினிமாக்கள் தான் பிரபலமாக இருந்து வரும். அப்படி ஒரு அடையாளமாக இருந்த ஹிந்தி சினிமாவில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் என பலரும் உலக அளவில் பிரபலமாகவும் இருந்து வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பாலிவுட் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தென்னிந்திய திரைப்படங்கள் அமைந்திருந்தது, சர்வதேச அரங்கிலும் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த வகையில் தென்னிந்திய இந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகர்கள் பட்டியலில் தென்னிந்திய நடிகர்களின் தாக்கமும் அதிகம் இருப்பது தற்போது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது.
இந்த வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர் பற்றியும், அவர்களின் சம்பளம் என்ன என்பது பற்றி போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கை என்ன என்பதையும் பார்க்கலாம்.
10. அக்ஷய் குமார்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் பெரும்பாலும் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எமோஷனல் கலந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் வெளியாகி வரும் சூழலில் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை தழுவி வருகிறது. ஆனாலும் வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அக்ஷய் குமாரின் சம்பளம், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 60 முதல் 145 கோடி ரூபாய் வரையில் உள்ளது.
09. கமல்ஹாசன்
9 வது இடத்தில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் உள்ளார். ஒரு காலத்தில் சினிமாவில் முன்னோடியாக விளங்கி பல புதிய முயற்சியை தமிழ் சினிமாவில் புகுத்திய கமல், தற்போது கமர்சியல் ஏரியாவிலும் பூந்து விளையாடி வருகிறார். விக்ரம், இந்தியன் 2 படங்களுக்கு பிறகு தக் லைஃப், இந்தியன் 3, கல்கி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வரும் கமலின் சம்பளம் 100 முதல் 150 கோடி ரூபாய் வரையில் உள்ளது.
08. சல்மான் கான்
இந்த வரிசையில், 8 வது இடத்தில் ஒரு பெரிய ஹிட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்து வரும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளார். கடைசியாக டைகர் 3 படத்தில் நடித்திருந்த சல்மான் கான், அடுத்ததாக ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் படத்திலும் நடித்து வரும் அவரின் சம்பளம் 100 முதல் 150 கோடி வரை உள்ளது.
07. அஜித் குமார்
கமலுக்கு பிறகு மீண்டும் ஒரு தென் இந்திய நடிகராக அஜித் குமார் உள்ளார். திரைப்படங்களை விட பைக், கார் மீது அதிக பிரியமுள்ள அஜித், ரசிகர்களால் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார். அடுத்ததாக விடாமுயற்சி, Good Bad Ugly படத்தில் நடித்து வரும் அஜித்தின் தற்போதைய சம்பள அளவு 105 முதல் 165 கோடி வரை உள்ளதாக கூறப்படுகிறது.
06. பிரபாஸ்
நடித்தால் பேன் இந்தியன் படங்கள் தான் என்ற ரேஞ்சிற்கு வருடத்திற்கு ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் தோன்றும் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 AD, சலார் உள்ளிட்ட படங்கள் வெளியானது. இவரது சம்பளமும் தற்போது 200 கோடி ரூபாய் வரையில் உள்ளதாக கூறப்படுகிறது.
05. அமீர் கான்
டங்கல் என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த அமீர் கான், தற்போது அரிதாகவே திரைப்படங்களில் தோன்றி வருகிறார். இருந்தாலும் லால் சிங் சத்தா திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்த அமீர் கானின் சம்பளமும் 275 கோடி ரூபாய் வரையில் இருப்பதாக கூறப்படுகிறது.
04. ரஜினிகாந்த்
இந்தியாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தியிருந்தார். ஆனால், அதன் பின்னர் வந்த திரைப்படங்களில் ஜெயிலர் மட்டுமே அதிக வசூலை ஈட்டியிருந்தது. ஆனாலும், அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையாமல் இருக்க, ரஜினியின் சம்பளமும் 125 முதல் 275 கோடி ரூபாய் வரையில் உள்ளது.
03. ஷாருக் கான்
இந்திய சினிமாவின் கிங்காங் என அறியப்படும் ஷாருக் கான், ரஜினியை விட குறைவான சம்பளம் வாங்கினாலும் குறைந்தபட்சமாக 150 கோடி ரூபாய்க்கு மேல் வாங்குவதும் 3 வது இடத்திற்கு அவரை கொண்டு சேர்த்துள்ளது. மேலும் ஷாருக் கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
02. விஜய்
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும் தென்னிந்திய நடிகர்கள் சொந்தமாக்க, அதில் 2 வது இடத்தை பிடித்துள்ளார் விஜய். ஒரு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதற்கு விஜய் படங்கள் மிகச்சிறந்த உதாரணம். அவரது நடிப்பில் கடைசி திரைப்படமான தளபதி 69 பணிகள் ஹெச். வினோத் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரது சம்பளமும் தற்போது 275 கோடி ரூபாய் வரையில் உள்ளதாக கூறப்படுகிறது.
01. அல்லு அர்ஜுன்
தென்னிந்தியாவில் ஏற்கனவே பிரபலமான நடிகராக இருந்த அல்லு அர்ஜுன், புஷ்பா என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருந்தார். இந்த படத்தி்ன் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் சாதனைகளை ஒவ்வொன்றாகவும் முறியடித்து வருகிறது. இதனால் மவுசு அதிகமான அல்லு அர்ஜுனின் சம்பளமும் 300 கோடி ரூபாயை தொட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இப்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் வரிசையில் முதலிடத்தில் ஒரு தென் இந்திய நடிகர் இருக்கிறார் என்பதை தாண்டி 10 இடங்களில் 6 இடங்களை தென்னிந்திய நடிகர்கள் அபகரித்து கொண்டுள்ளார்கள் என்பதும் பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.