மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமீபத்தில் ஆரம்பமாகி இருந்த நிலையில் அதன் முதல் நாள் முடிவுக்கு வந்துள்ளது. பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால் இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணிக்கு அதிகம் சாதகமும் இருந்தது. அவர்கள் இந்தியாவை விட அதிக போட்டிகளை பிங்க் பந்தில் ஆடி உள்ளதால் அந்த அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதனை முதல் நாளிலேயே நிரூபித்து அசத்தி உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி, ராகுல் மற்றும் கில் ஆகிய மூவர் மட்டும் தான் 30 ரன்களைத் தாண்டி ரன் சேர்த்திருந்தனர். கோலி, ரோஹித் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சொதப்பி, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கும் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி இருந்தார்.
பலமாக விளங்கும் ஆஸ்திரேலியா
தொடர்ந்து முதல் நாளில் தங்களது பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, அதன் முடிவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது. கவாஜா 13 ரன்களில் பும்ரா பந்து வீச்சில் நடையைக் கட்ட, நாதன் மேக்ஸ்வீனி 38 ரன்களுடனும், மார்னஸ் 20 ரன்களுடனும் தடுப்பாட்டம் ஆடியபடி களத்தில் நிற்கின்றனர்.
மேலும் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணியின் கையே அதிகம் ஓங்கியிருக்க, இது இன்னும் ஒரு நாள் தொடர்ந்தாலே அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகி விடும் என தெரிகிறது. இதனிடையே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி வரும் டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் அதே நேரத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் டெஸ்ட் போட்டியில் மோதி வருகிறது.
2 மேட்ச்ல இப்டி ஒரு ஒற்றுமையா..
இந்த இரண்டு போட்டியிலும், 15 நிமிட இடைவெளியில் ஒரே மாதிரி நடந்த சம்பவம் தொடர்பான செய்தி பலரையும் வியக்க வைத்துள்ளது. இங்கிலாந்து வீரர் ப்ராய்டன் கார்ஸ் பந்து வீச்சில் கேன் வில்லியம்சன் போல்டு அவுட்டானார். ஆனால், பின்னர் ஆராய்ந்த போது கிரீஸ் வெளியே கார்ஸ் கால் வைத்ததால் நோ பால் என தெரிய வந்தது. பின்னர் மீண்டும் வாழ்வு கிடைத்து வில்லியம்சன் ஆடியிருந்தார்.
இந்த சம்பவம் முடிந்து சரியாக 15 நிமிடம் கழித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலந்து பந்து வீச்சில் கே எல் ராகுல் அவுட்டாக, பின்னர் அது நோ பால் என்பதும் தெரிய வந்தது. இப்படி வெவ்வேறு டெஸ்ட் போட்டிகளில் ஒரே மாதிரி வாழ்வு கிடைத்த ராகுல் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் தலா 37 ரன்களில் அவுட்டானதும் ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.