பெரும்பாலான வீடுகளில் இன்று குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி வருவது என்பது அதிகரித்து உள்ளது. இது பெற்றோருக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி உள்ளது. ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு மொபைல் போனை அறிமுகம் செய்த பெற்றோர்கள் தான் பின்பு இதனை எப்படி குழந்தைகளிடமிருந்து விலக்கி வைப்பது என்று தெரியாமல் குழம்பி இருக்கிறார்கள். குழந்தைகளை மொபைல் ஃபோனில் இருந்து மெல்ல மெல்ல மீட்க பெற்றோர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
குழந்தைகள் மொபைல் போனிலிருந்து விலக வேண்டும் என்றால் முதலில் அதற்கு நீங்கள் குழந்தைகளின் முன்மாதிரியாக மாற வேண்டியது அவசியம். குழந்தைகள் முன் மொபைல் போன் பார்ப்பதை குறைக்க வேண்டும். நீங்களே மொபைலில் அதிக நேரம் செலவிட்டு குழந்தைகளை பார்க்க வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் அதனை கேட்க மாட்டார்கள்.
மொபைல் போன்களை தேவையான போது மட்டுமே பயன்படுத்துவதை வீட்டில் உள்ள அனைவருமே வழக்கமாக்கிக் கொள்ளுதல் வேண்டும். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் செல்போனை பார்த்துக்கொண்டே இருக்கக் கூடாது. நண்பர்களுடன் வெளியே செல்வது, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, பாடல்கள் கேட்பது, வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடுவது போன்றவற்றில் நீங்களும் ஈடுபட்டு குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மொபைல் போனை பார்க்கலாம் என்ற கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். சாப்பிடும் பொழுதோ அல்லது தூங்கும் முன்போ எக்காரணம் கொண்டு மொபைல் பார்க்கக் கூடாது என்பதை விதியாக பின்பற்ற செய்யுங்கள்.
படிப்பு விளையாட்டு இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக தான் மொபைல் போனை கையில் எடுக்க வேண்டும் என்பதை படிப்படியாக கட்டாயமாக நடைமுறைப்படுத்துங்கள்.
மொபைல் போனிற்கு அடிமையாவதால் ஏற்படும் ஆபத்துக்களை பிள்ளைகளுக்கு மென்மையாக எடுத்துக் கூற வேண்டும். ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்றும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மொபைல் போனுக்கு அடிமையாவதால் ஏற்படும் ஆபத்துக்களை பிள்ளைக்கு பொறுமையோடு விளக்கி கூறினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அன்றாடம் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசி விளையாடி மகிழ்வதையும் பெற்றோர்கள் வழக்கமாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதை குறைக்க விளையாட்டு புதிர்கள் போன்ற பயனுள்ள பொழுது போக்குகளில் அவர்களை ஈடுபட செய்யுங்கள். அவர்களிடம் இயல்பாக உள்ள திறமையை கண்டறிந்து அதை வளர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
விடுமுறை நாட்களிலும் வாய்ப்பு கிடைக்கும் நேரத்திலும் குழந்தைகளை வெளியிடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு புதிய அனுபவங்களை உணரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகள் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
எந்நேரமும் மொபைல் போனில் மூழ்கி இருப்பது என்பது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட பழக்கமாகிவிட்டது .இதனால் உடல் செயல்பாடும், சிந்திக்கும் திறனும் குறைகின்றன உடல் பருமன் அதிகரித்தல் கண்பார்வை பாதிப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.