பொதுவாகவே முட்டை சேர்த்து செய்யப்படும் எந்த ஒரு ரெசிபியும் சுவை அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முட்டையில் ஏராளமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். மேலும் முட்டை உடலுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதிலும் சிறந்த உணவு பொருள். எனவேதான் மருத்துவர்கள் தினமும் உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டை சேர்த்துக் கொள்வது சிறந்தது என்று கூறுகிறார்கள்.
இத்தகைய முட்டை வைத்து வித்தியாசமான ஒரு ரெசிபியை இப்பொழுது நாம் பார்க்கலாம். இந்த ரெசிபி வித்தியாசமானது மட்டுமல்ல மிக மிக சுவையானது கூட. முட்டை பிடிக்காதவர்கள் கூட இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.
இதற்கு முதலில் 200 கிராம் அளவு உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்து எடுத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும். 200 கிராம் அளவு முட்டைக்கோசை எடுத்து நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இதனை தாளித்த பிறகு துருவி வைத்திருக்கும் முட்டைக்கோசை சேர்க்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளற வேண்டும்.
வதக்க தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம். முட்டைகோஸ் நன்கு வெந்து வந்த பிறகு நான்கு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விட வேண்டும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் புது மணத்துடன் அனைத்து விதமான சாதத்திற்கும் ஏற்ற சைட் டிஷ் தயாராக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.