கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி வீரமரணம் எய்திய சென்னையைச் சேர்ந்த இராணுவ அதிகார் மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கை வைத்து திரைப்படமாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அமரன் சிவகார்த்திகேயனின் இமேஜை தென்னிந்திய சினிமா உலகில் உயர்த்தியிருக்கிறது. இராணும் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சிவகார்த்திகேயன் நடிப்பினைப் பாராட்டி கௌரவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தால் சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அமரன் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய செல்போன் எண் என்று ஒரு நம்பரை எழுதித் தருவார்.
மீண்டும் ஆஸ்கர் ரேஸில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.. கனவு நனவாகுமா?
அந்த எண் உண்மையில் சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வாகீசன் என்பவருடையது. இதனால் ரசிகர்கள் அதுதான் உண்மையான சாய்பல்லவி எண் என நினைத்து தினமும் அவருக்கு அழைப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது. ஒருகட்டத்தில் அழைப்புகள் அதிகமாக வரவே மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் வாகீசன். இதுகுறித்து பட நிறுவனத்திற்கு புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அம்மாணவர் தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தினை நாடியிருக்கிறார்.
தனது புகாரில் மாணவர், அமரன் படத்தில் சாய்பல்லவி பகிரும் செல்போன் எண் என்னுடையது. இதனை நீக்கக் கோரி தயாரிப்பு நிறுவனத்திடமும், இயக்குநரிடத்திலும் கூறினேன். இதுவரை அவர்கள் அதைத் திருத்தாததால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக ரூ.1.10 கோடி தர வேண்டும் என்றும், மேலும் காட்சியை நீக்கும் வரை ஓடிடி வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் மாணவர் கூறியிருக்கிறார்.