நமது குடும்பத்தில் கூட அண்ணன் – தம்பி, அண்ணன் – தங்கை என இருக்கும் போது அவர்களுக்கு இடையே சண்டை வரும் பட்சத்தில் உன்னை குப்பைத் தொட்டியில் இருந்து தான் எடுத்து வந்தார்கள் என்றும் இது உன்னுடைய அப்பா, அம்மா இல்லை என்றும் விளையாட்டுக்கு சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். இப்படி சொல்லும் போது அவர்களுக்கும் ஒருவித சந்தேகம் வருவதுடன் நிஜத்தில் உண்மையை தெரிந்து கொள்ள பெற்றோர்களை நச்சரிப்பார்கள்.
இது ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும் இன்னொரு புறம், சிலர் தாங்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்பது தெரியாமல், வளர்ப்பு பெற்றோர்களை நிஜம் என நினைத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அதை தெரிந்து கொள்ளாமலே காலத்தை கடப்பவர்கள் இருப்பது போல பாதியில் உண்மை அறிந்து நிஜ பெற்றோர்களை தெரிந்து கொள்ளவும் அதிர்ச்சியுடன் பலரும் சுற்றித் திரிவார்கள்.
நிஜ பெற்றோர்கள் யார்?..
அந்த வகையில், 40 வயதாகும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது பயலாஜிக்கல் தந்தை யார் என்பது பற்றி கண்டுபிடித்த பின்னணி, பலர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் தான் 40 வயதாகும் தமுனா முசெரிட்ஸ் (Tamuna Museridze). இவர் சிறு வயதில் தத்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அது தெரியாமலேயே வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது வளர்ப்பு தாயின் வீட்டை சுத்தம் செய்த போது நிஜ பிறப்பு சான்றிதழை தமுனா கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது பெயரை தவிர சான்றிதழில் பிறப்பு தேதி உள்ளிட்ட விஷயங்கள் வேறாக இருந்ததால் தமுனாவுக்கு சந்தேகமும் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பேஸ்புக் மூலம் தனது நிஜ பெற்றோர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். அதில் கைமேல் பலன் கிடைக்க, பெண் ஒருவரின் மூலம் தமுனாவின் நிஜ தாயார் பெயரும் தெரிய வந்துள்ளது.
ஆனால் இது பற்றி வேறு விவரம் தெரியாமல் இருந்த போது தான் தமுனாவின் தாயாருடைய உறவு பெண் ஒருவர் மூலம் வேறு சில தகவலும் கிடைத்துள்ளது. இதன் பின்னர் அந்த பெண்ணும் தமுனாவும் டிஎன்ஏ டெஸ்ட் மேற்கொண்ட போது அவர்கள் உறவினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் அடுத்தடுத்து தகவல் கிடைக்க தமுனாவின் தந்தை பெயர் Gurgen Khorava என்பதும் தெரிய வந்துள்ளது.
3 வருட பேஸ்புக் ஃப்ரெண்ட்
இதில் மற்றொரு அதிர்ச்சியாக, தமுனா மற்றும் அவரது தந்தை குர்கன் ஆகிய இருவரும் 3 ஆண்டுகளாக பேஸ்புக் நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது நிஜ தந்தையை தமுனா சந்தித்ததுடன் குடும்பத்தினர் அனைவரையும் கண்டு உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், 3 வருடங்களாக தனது பதிவுகளையும் கவனித்து வந்த ஒருவர் பெண் ஒருவர் நீண்ட நாளாய் தேட வந்த தனது தந்தை என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.