ஒருவருக்கு இறப்பு எப்போது வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்ற நிலையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் இறப்பு எந்த தேதியில் நிகழும் என்பதை கணிக்கக்கூடிய ஒரு செயலி வந்துவிட்டது என்று கூறினால், அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா? ஆம், “டெத் லாக்” என்ற செயலி இறப்பு தேதியை சரியாக கணித்து கூறுவதாக பரப்பப்படுகிறது.
இந்த செயலி குறுகிய காலத்திலேயே ஒரு லட்சத்து 20 ஆயிரம் டவுன்லோட்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான மனிதர்களை ஆய்வு செய்து, ஆயிரக்கணக்கான தகவல்களை AIக்கு உள்ளீடாக கொடுத்து, அந்த தகவல்களின் மூலம் ஒருவரின் இறப்பு தேதியை கணிக்கிறது.
ஒருவர் சாப்பிடும் உணவு, செய்யும் உடற்பயிற்சி, அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம், அவர் எவ்வளவு மணிநேரம் தூங்குகிறார் போன்ற விவரங்களை பயன்படுத்தி, அவரது இறப்பு தேதியை இந்த AI செயலி கணிக்கிறது. ஆனால், இது இலவச செயலி அல்ல. இந்த விவரங்களை பெற 3,400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலி, ஒருவரின் இறப்பு தேதியை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக மட்டுமன்றி, நமது வாழ்க்கை முறையில் என்ன தவறு செய்கிறோம், நீண்ட ஆயுளோடு இருக்க எதை மிஸ் செய்கிறோம் என்பதை அறிந்து வாழ்நாளை அதிகரித்து கொள்ளவும் உதவக்கூடும் என்று, இந்த செயலியை உருவாக்கிய நபர் தெரிவித்துள்ளார்.