எப்போதும் இந்திய சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் என்றால் அது நிச்சயம் ரஜினிகாந்த் தான். பல நடிகர்கள் முதல் சில படங்களில் நல்ல பெயரை எடுத்தாலும் அதில் கிடைக்கும் புகழை நீண்ட காலம் தக்க வைக்க பெரும்பாடு படுவார்கள். ஆனால், சுமார் 50 ஆண்டுகளாக ரஜினிகாந்த் மூலம் இந்திய சினிமாவில் ஏற்பட்ட தாக்கத்தை நிச்சயம் வேறு எந்த நடிகராலும் இனிமேல் கொடுத்து விடமுடியாது.
கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த்தை சுற்றி அதிக விமர்சனங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நிறைய எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையிலான திரைப்படங்களை தேர்வு செய்தும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்தும் புதிய திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனிடையே, கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான தங்கமகன் என்ற படத்திற்காக ரஜினி செய்த உதவி தொடர்பான செய்தி தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் ஒரு நேர்காணலில் பேசுகையில், “ரஜினி நடிப்பில் உருவாகி இருந்த தங்கமகன் திரைப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவர் 3 மாத காலம் காய்ச்சலிலேயே இருந்து விட்டார். வேறு படத்திற்கும் நடிக்க போகவில்லை.
சம்பளத்தை திருப்பி கொடுத்த ரஜினி
உடல்நிலை சரியில்லாமல் 3 மாதங்கள் வரை ரஜினிகாந்த் சிகிச்சை எடுத்து மீண்டு வந்தார். பின்னர் தங்கமகன் படப்பிடிப்பிற்காக அவர் கால்ஷீட் கொடுத்து படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதன் பின்னர், ரஜினிக்கு சுமார் 10 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பள பாக்கி இருந்துள்ளது. படம் வெளியானதன் பின்னர் சத்யா மூவிஸ் தயாரிப்பாளர், ரஜினி வீட்டிற்கு நேரில் சென்று பணத்தை கொடுத்து விட்டு வந்தார். அப்போது 10 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை.
ஆனால், மூன்றாவது நாளில் அந்த பணத்தை தனது நண்பர்கள் மூலம் தயாரிப்பாளரிடம் மீண்டும் கொடுக்கும் படி ரஜினிகாந்த் அனுப்பி விடுகிறார். இது பற்றி தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்கப்பட, 3 மாதம் தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நிறைய வட்டி செலவாகி இருக்கும் என்றும் அதனை ஈடுகட்டுவதற்காக இந்த பணத்தை வைத்துக் கொள்ளும்படி சம்பள பாக்கியை அப்படியே ரஜினி திருப்பி அனுப்பியதும் தெரிய வந்தது” என கே. ராஜன் கூறியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தன்னால் தயாரிப்பாளர் நிலைமை மோசமாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் செய்த விஷயம் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.