தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும், 7,000 ரூபாய்க்கும் அதிகமாக தேவைப்படும். ஆனால், வெறும் 60 ரூபாய் இருந்தால் கூட தங்கம் வாங்கலாம் என்ற தகவல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைகளில் சென்று தங்கம் வாங்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் வாங்க வேண்டும். அதற்கு 7,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகியவை சேர்த்து பணம் செலுத்த வேண்டும். ஆனால், ஆன்லைனில் தங்கத்தை வெறும் 60 ரூபாய் இருந்தால் கூட வாங்க முடியும்.
கோல்ட் எக்சேஞ்ச் ட்ரேட் பண்ட் (Gold Exchange Trade Fund) எனப்படும் இந்த திட்டத்தில் பங்குச்சந்தையில் “கோல்ட் ETF” என்று அழைக்கின்றன. இதில் ஒரு கிராம் தங்கத்தை 100 பகுதிகளாக பிரித்து, ஒரு யூனிட்டின் விலை 60 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், 60 ரூபாய் இருந்தால் கூட ஒரு யூனிட் தங்கம் வாங்கலாம்.
ஆனால், இந்த தங்கத்தை வாங்குவதற்கு டீமேட் (Demat) கணக்கு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை வெறும் முதலீடாக மட்டுமே பார்க்கும் நபர்கள் மற்றும் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், இந்த கோல்ட் ETF திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
60 ரூபாய் இருந்தால் ஒரு யூனிட், 600 ரூபாய் இருந்தால் 10 யூனிட்கள் போன்றும், அவ்வப்போது பணம் கிடைக்கும் போதெல்லாம் கோல்ட் ETF-ல் முதலீடு செய்யலாம். 5 அல்லது 10 வருடங்களில், இம்மாதிரியான முதலீடு ஒரு பெரிய தங்கத்தின் அளவுக்கு மாறும். அப்போதைய தங்கத்தின் விலையில் நல்ல லாபம் கிடைக்கும்.
தங்கத்தை பிசிக்கலாக வாங்கினால், செய்கூலி, சேதாரம் மற்றும் வரிகள் ஆகியவை இருக்கும். ஆனால், கோல்ட் ETF மூலம் தங்கம் வாங்குவதில் இதுபோன்ற செலவுகள் இருக்காது.