தமிழ் சினிமாவில் வெளியாகும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகும் போது அதன் இசையமைப்பாளர்களை தான் அதிகம் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் பாடல் ராகங்களுக்கு ஏற்ப அதற்காக வரிகளை எழுதும் பாடலாசிரியர்கள் பங்கும் ஒரு பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் வைரமுத்து, நா. முத்துக்குமார், தாமரை, பா. விஜய் என பல சிறந்த பாடலாசிரியர்கள் நிறைய ஹிட் பாடல்களை எழுதி அசத்தியுள்ளனர். அந்த வரிசையில் யுகபாரதிக்கு எப்போதுமே மிக முக்கியமான ஒரு இடமுண்டு. குறிப்பிட்ட ஜானரில் மட்டும் பாடல்களை எழுதாமல் ராகங்களுக்கு ஏற்ப அது குத்து பாடல் அல்லது எமோஷனல் பாடல் என எதுவாக இருந்தாலும் தனது வார்த்தைகள் மூலம் மிகப்பெரிய தாக்கத்தையும் கேட்பவர்கள் மனதில் ஏற்படுத்தக்கூடிய திறன் படைத்தவர் தான் யுகபாரதி.
யுகபாரதி செய்த மேஜிக்..
பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன், காதல் பிசாசே, மன்மத ராசா, தாவணி போட்ட தீபாவளி என யுகபாரதி திரைப்படங்களில் பாடல்கள் எழுத தொடங்கிய காலத்தில் கொடுத்த ஹிட் பாடல்கள் ஏராளம். சமீபத்தில் கூட மாமன்னன், லால் சலாம், வேட்டையன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது பாடல்களை எழுதியிருந்த யுகபாரதி, ஏ. ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், அனிருத் என பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்கள் எழுதியுள்ளார்.
அப்படி ஒரு சூழலில் ஒரு கல்லூரியில் விருந்தினராக யுகபாரதி சென்ற சமயத்தில் வேடிக்கையாக நடந்த சம்பவம் தொடர்பான செய்தி அதிக கவனம் பெற்று வருகிறது. திருடா திருடி திரைப்படத்தில் வரும் மன்மத ராசா பாடலை யுவபாரதி தான் எழுதியிருந்தார். சமூக வலைத்தளங்கள் வைரலாக இல்லாமல் இருந்த காலத்திலேயே இந்த பாடல் ஒவ்வொரு வீட்டிலும் சக்கை போடு போட்டிருந்தது.
மன்மத ராசாவை கிழித்த நபர்..
தீனா இசையமைத்திருந்த இந்த பாடல் இன்று நினைத்தாலும் பல 90’ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கிவிடும். அந்த பாட்டு வந்த சமயத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்காக விருந்தினராக சென்றுள்ளார் யுகபாரதி. கல்லூரி முதல்வரும் மேடையில் இருக்க, அவர் அந்த சமயத்தில் வெளியான பாடல் வரிகள் பற்றி பேசியுள்ளார். அவருக்கு யுகபாரதி தான் மன்மத ராசா பாடலை எழுதி இருக்கிறார் என்பது தெரியாது.
யுகபாரதி எழுதிய மற்ற பல பாடல்களை கொண்டாடிய அந்த கல்லூரி முதல்வர், ஒரு கட்டத்தில், ‘மன்மத ராசா என்ற ஒரு பாடல். எவ்வளவு மோசமாக எழுதி இருக்கிறார்கள். அது என்ன பாடல், என்ன நடனம். ஆனால் தம்பி யுகபாரதி அப்படி கிடையாது’ என கூறியுள்ளார். இதனை கேட்டதும் தனது பாடல் என தெரியாமல் கல்லூரி முதல்வர் விமர்சிக்க, மேடையில் இருந்து எழுந்து போய்விடலாமா என்றும் யுகபாரதிக்கு தோன்றியதாக அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.