தமிழ் சினிமாவில் கமர்சியலாக திரைப்படங்கள் எடுத்து ஹிட் கொடுத்த இயக்குனர்கள் பலர் உள்ளனர். அதில் முக்கியமான ஒருவர் தான் பிரபல இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார். புரியாத புதிர் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்திருந்த கே.எஸ். ரவிக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களையும் இயக்கி பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படத்தில் சிறப்பம்சமே காமெடி, ஆக்சன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் மிக அசத்தலாக இருப்பதுடன் குடும்பமாக கொண்டாடும் அளவுக்கும் திரைப்படங்கள் அமைந்திருப்பது தான். அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தெனாலி என கமல்ஹாசனுடன் இணைந்து எவர்க்ரீன் காமெடி கலந்த திரைப்படங்களையும் இயக்கியுள்ள கே. எஸ். ரவிக்குமார், ரஜினியுடன் இணையும் போது மாஸ் கமர்ஷியல் ஃபார்முலாவையும் பயன்படுத்தி படையப்பா, முத்து உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களையும் கொடுத்துள்ளார்.
இப்படி முன்னணி ஹீரோக்களின் ஃபேவரைட் இயக்குனராக இருந்த கே. எஸ். ரவிக்குமார், விஜய்யுடன் மின்சாரக்கண்ணா, அஜித்துடன் வரலாறு, வில்லன், சூர்யாவுடன் ஆதவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார். சமீப காலமாக திரைப்படங்கள் இயக்குவதை குறைத்துக் கொண்ட கே.எஸ். ரவிக்குமார், வில்லன், குணச்சித்திரம் மற்றும் காமெடி கலந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
பாதியில் டிராப் ஆன ராணா
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ரஜினிகாந்தை வைத்து ராணா என்ற திரைப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. வரலாற்று சிறப்பம்சம் கொண்ட வகையில் இதன் கதை உருவாக்கப்பட்டிருந்த நிலையில், இதன் பூஜையும் நடைபெற்றிருந்தது. அதற்கு மத்தியில் தான் திடீரென ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவும் ஏற்பட்டு படப்பிடிப்பும் நடைபெறாமல் போனது.
ரஜினியும் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வர, ராணா படப்பிடிப்பும் தள்ளிப் போயுள்ளது. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் எப்போது திரும்ப படப்பிடிப்பிற்கு வருவார் என்பதும் தெரியாமல் காலம் தாழ்த்தி கொண்டே போனது. அதே நேரத்தில், கே. எஸ். ரவிக்குமாரும் வேறு திரைப்படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகாமல் ரஜினி வருவாரா அல்லது ஓய்வு எடுத்துக் கொண்டு தான் படம் நடிப்பாரா என்பதையும் அறியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ரஜினிக்காக மறுத்த ரவிக்குமார்
ரஜினிகாந்தின் முடிவு என்ன என்பதை தெரிந்து விட்டு வேறு படத்தில் ஒப்பந்தமாகலாம் என்றும் கே.எஸ். ரவிக்குமார் காத்திருந்து வந்ததுடன் அதுவே சரியான முடிவு என்றும் நினைத்துள்ளார். இதற்கு மத்தியில் தான் அவரது இயக்கத்தில் நடிக்க விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினியின் முடிவு என்ன என்பது தெரியாமல் தான் வேறு படங்களை இயக்கமாட்டேன் என்றும் கே. எஸ். ரவிக்குமார் தனது முடிவை தெரிவிக்க, விஜய்யை இயக்கும் வாய்ப்பும் அப்போது கைவிட்டு போனது.
தொடர்ந்து ரஜினி சிகிச்சை முடிந்து திரும்பிய போது ராணா கதை தான் அவரது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கோச்சடையான் என அனிமேஷன் திரைப்படமாக உருவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.