பிரபலமாக இருக்கும் நபர்களை நாம் பார்க்கும் போது அவர் பற்றிய ஒரு வித்தியாசமாக எண்ணம் தான் நமக்கு உருவாகும். பொது இடங்களில் அல்லது ஏதாவது நிகழ்ச்சிகளில் அவர் பேசும் விஷயங்கள் அடிப்படையில் இவர் இப்படிப்பட்டவர் என்று நாமே ஒரு தீர்மானத்தை எடுத்திருப்போம். இதன் காரணமாகவே அவர் மீது ஏராளமான விமர்சனங்களும் கூட உருவாக்கி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடன் இருந்து உணர்ந்தவர்கள் சொல்லும்போது நமக்கு அப்படியே வேறொரு பார்வையும் கிடைக்கும்.
அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னொரு பக்கம் தனது யூடியூப் பக்கத்திலும் கிரிக்கெட் தொடர்பாக நிறைய விமர்சனங்களையும் செய்து வரும் ஸ்ரீகாந்த் எப்போதும் வேடிக்கையான நபர் என்றும் ஏதாவது கத்தி பேசிக் கொண்டே இருப்பவர் என்றும் அதே நேரத்தில் வீரர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் விமர்சிக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் ஒரு முன்னாள் வீரராக அவர் சொல்லும் சில கருத்துக்கள் உண்மையாகத்தான் இருக்கும். அவர் சொல்லும் தோணியை தான் பலராலும் இங்கே ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட சூழலில் ஸ்ரீகாந்த் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்பது பற்றி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்து கொண்டுள்ளார். “ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக நான் ஒரு முறை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வீட்டிற்கு சென்றிருந்தேன். நாம் வெளியே பார்ப்பது போல கத்தியபடி வாயில் தோன்றியது எல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் நபர் இல்லை. நான் இன்னொரு நபரை அங்கே பார்த்தேன்.
சீக்காவின் நல்ல மனசு..
ஸ்ரீகாந்த் சார் வீட்டில் ஒரு 20 பேர் வரை வேலை செய்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் படித்து இன்போசிஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் 20 முதல் 30 வருடங்களுக்கு முன்பாக வேலையில் சேர்ந்திருக்கலாம். அவர்கள் வேலைக்கு சேர்ந்த தினத்தில் உங்களது தலைமுறையில் நீங்கள் தான் தினசரி வேலை செய்யும் கடைசி ஆளாக இருக்க வேண்டும். இதற்கு பின்னர் வரும் அனைவரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
அப்படி அடுத்த தலைமுறையை படிக்க வைத்து நல்ல வேலைக்கும் சேரும் வழியிலும் செய்துவிட்டார் ஸ்ரீகாந்த். ஆனாலும் அவரை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கே வேலை செய்பவர்களை பார்த்தேன். என் மீது அதிக அக்கறையாக இருப்பதால் எப்போதும் ஸ்ரீகாந்த் மீது எனக்கு ஒரு நல்ல மதிப்புண்டு. அவர் வீட்டிற்கு நேரில் சென்று இதை பார்த்ததும் இன்னும் அவரை நினைத்து நான் இன்ஸ்பயர் ஆனேன்” என ஆர் ஜே பாலாஜி மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.