புத்தாண்டு ராசி பலன் 2025 – விருச்சிக ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரும்.. என்ஜாய் மக்களே!

By TM Desk

Published:

2025 புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த ஆண்டிலாவது நமக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், பொருளாதார நிலை உயர வேண்டும், நோய், கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டுவார்கள். 2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனியின் இடமாற்றத்தாலும் குருவின் அருளாலும் ராகு, கேதுவின் புண்ணியத்தாலும் குபேர யோகம் தேடி வரப்போகிறது.

விருச்சிகம்:

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அர்த்தாஷ்டம சனியால் பலவித சிரமங்களை அனுபவித்திருப்பீர்கள். இனி எல்லாம் சுகமே என்பது போல சனியின் பாதிப்பில் இருந்து விடுபடப்போகிறீர்கள். 2025ஆம் ஆண்டு முழுவதும் குரு பலன் கிடைக்கப்போகிறது. ராகு கேதுவின் பயணமும் சாதகமான இடத்தில் இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களை காணப்போகிறீர்கள்.

சனி பெயர்ச்சி:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடியப்போகிறது. சனிபகவான் நான்காம் வீட்டில் இருந்து 5ஆம் வீட்டிற்கு இப்பெயர்ச்சி அடையப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனி இடம் மாறுவதால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடலில் இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும்.

குரு பெயர்ச்சி

2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். குருபகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண சுப காரியங்கள் நடைபெறுவதில் தடையிருக்காது. மே மாதத்திற்குப் பிறகு குரு இடப்பெயர்ச்சியாகி எட்டாம் வீட்டிற்கு சென்றாலும் குருவின் பார்வை பலனால் பண வருமானம் குறைவில்லாது இருக்கும். அதே நேரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் பிறந்தவர்களே உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. இரவு நேர பயணங்களில் கவனம் தேவைப்படும் வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். அக்டோபர் மாதத்தில் அதிசாரமாக நகரும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு வந்து அமர்வது சிறப்பு. அந்த நேரத்திலும் குருவின் 5ஆம் பார்வையானது உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. சொந்த பந்தங்களிடையே நெருக்கம் கூடும். தம்பதியரிடையே உறவில் பலம் அதிகரிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி:

ராகு பகவான் 5ஆம் வீட்டிலும் கேது பகவான் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திலும் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை பயணம் செய்வார்கள். ராகுவும் கேதுவும் உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். மே மாதத்திற்குப் பிறகு ராகு நான்காம் வீட்டிற்கும் கேது 10ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பு. பணம் பலவழிகளில் இருந்தும் வரும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சுக ஸ்தான ராகு ஆண்டின் பிற்பகுதியில் சுகத்தையும் சந்தோஷத்தையும் தரப்போகிறார்.

2025ஆம் ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது. காரணம், சனி, ராகு, கேது, குரு ஆகிய கிரகங்களின் பயணம் சாதகமான இடத்தில் இருக்கிறது. வெற்றிகள் தேடி வர, மேலும் நன்மைகள் அதிகரிக்க வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.