தென்னிந்திய சினிமாக்களில் தற்போது பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருவது சாதாரணமாக ஒரு நிகழ்வாக நடந்து வருகிறது. ஆனால் கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் அப்படிப்பட்ட சம்பவங்கள் மிக அரிதாகவே நடைபெற்றிருந்தது. அந்த வகையில் இரண்டு தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஸ்டாராக இருந்த விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்த திரைப்படம் தான் ஜில்லா.
தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் மோகன்லால் மற்றும் விஜய் இணைந்து நடிக்க, கமர்சியல் சினிமா பிரியர்களுக்கு மிகப்பெரிய ஒரு வேட்டையாகவும் அமைந்திருந்தது ஜில்லா. பொங்கல் விருந்தாக வெளியான ஜில்லா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இதில் வரும் பாடல்களும் கூட ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றிருந்தது.
மோகன்லால் சொல்லியும் கேட்காத விஜய்
விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து தோன்றும் காட்சிகள் புல்லரிக்க வைத்திருந்த நிலையில், இந்த திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு நடுவே நடந்த ஒரு சம்பவம் பற்றி ஜில்லாவில் நடித்த நடிகர் ஜோ மல்லூரி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். “ஜில்லா படத்தின் படப்பிடிப்பின் போது எங்களை தனது வீட்டிற்கு உணவு உண்பதற்காக அழைத்திருந்தார் விஜய். அப்போது நானும், மோகன்லால் மற்றும் அவரது மனைவி என 3 பேரும் விஜய்யின் வீட்டிற்கு சென்றிருந்தோம்.
அங்கே விஜய், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் எங்களை வரவேற்றார்கள். அப்போது அங்கே வேலைக்காரர்கள் யாருமே இல்லை. விஜய்யும், அவரது மனைவியும் தான் பரிமாறினார்கள். அந்த சமயத்தில் மோகன்லால் என்னிடம், ‘விஜய் இன்னும் உணவு அருந்தவில்லையா?’ என கேட்டார். நானும் தெரியவில்லை எனக்கூற, மோகன்லால் நேரடியாக விஜய்யிடம் நீங்களும் சாப்பிடுங்க என கூறுகிறார்.
உண்மை அறிந்து நெகிழ்ந்த நடிகர்
ஆனால், விஜய்யோ எதுவும் சொல்லாமல் அதை மறுத்துக் கொண்டே இருந்தார். ஒரு பெரிய நடிகரான மோகன்லால் இப்படி சொல்லியும் விஜய் பதிலுக்கு சாப்பிடாமல் இருந்ததுடன் எதுவுமே சொல்லாமல் இருந்தது என்னை உறுத்தியது. அதன் பின்னர் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டோம். மறுநாள் காலையில், ஜில்லா படப்பிடிப்பின் போது விஜய் என்னை பார்க்க நான் அவரை பார்க்கவில்லை. நான் கோபத்தில் இருக்கிறேன் என்பதையும் அவர் உணர்ந்து விட்டார்.
அப்போது விஜய் என்னை அழைக்க, நான் அவரிடம், ‘ஒரு பெரிய மனிதன் வீட்டிற்கு வந்து சாப்பிட சொல்லியும் நீங்கள் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருந்தது என் மனதுக்கு கஷ்டமாக அமைந்து விட்டது’ என வெளிப்படையாக சொல்லிவிட்டேன். இதற்கு பதில் சொன்ன விஜய், ‘அண்ணே என் அப்பா – அம்மா ஒரு பழக்கத்தை பழக்கி விட்டுட்டாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க சாப்பிட்டு முடிச்சுட்டு போன பிறகு தான் சாப்பிடணும்னு பழக்கி விட்டாங்க.
அதான் உங்கள அனுப்புனத்துக்கு அப்புறமா தான் நாங்க சாப்பிட்டோம்’ என்றார் விஜய். அதன் பின்னர் உடனடியாக என் மனதும் சமாதானமாகி விட்டது” என ஜோ மல்லூரி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.