தமிழ் சினிமாவில் இன்று ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படங்கள் நிறைய வெளியாகி வரும் நிலையில் ரசிகர்களும் கூட அப்படிப்பட்ட திரைப்படங்களை தான் அதிகமாக எதிர்பார்க்க வருகின்றனர். அதிக சண்டைக் காட்சிகள், பாடல்கள், ஹீரோவின் மாஸ் காட்சிகள் என முழுக்க முழுக்க கமர்சியல் திரைப்படங்களை பெரும்பாலான ரசிகர்கள் விரும்பி வரும் அதே வேளையில் குறிஞ்சி பூத்தார் போல சில எமோஷன்கள் கலந்த திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான மெய்யழகன் திரைப்படம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் மிக முக்கியமான இடத்தையும் பிடித்திருந்தது. குடும்ப உறவுகளை அதிலுள்ள சிக்கல்கள் மாறாமல் அப்படியே இரு கதாபாத்திரங்களை கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்த இயக்குனர் பிரேம் குமார், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை அதே கதாபாத்திரமாகவே மாற்றி இருந்தார்.
தத்ரூபமாக பேசும் பிரேம் குமார்
இவர் இதற்கு முன்பாக இயக்கிய 96 திரைப்படமும், காதலில் பிரிந்து 20 ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்டவர்களின் வலியையும், உற்சாகத்தையும் மிக தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தார். அந்த வரிசையில் தற்போது உறவினர்கள் இரண்டு பேரின் நீண்ட நாளுக்கு பிறகான சந்திப்பு எப்படி இருக்கும் என்பதை எதார்த்தம் மாறாமல் பதிவு செய்ததால் மீண்டும் ஒருமுறை பிரேம் குமார் வெற்றி பெற்றிருந்தார்.
தொடர்ந்து அவர் இது போன்ற திரைப்படங்களை இயக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்பி வரும் நிலையில், அவருக்கு இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கொடுத்த பரிசு தொடர்பான செய்தி அதிக கவனம் பெற்று வருகிறது. தனக்கு பிடித்தமானவர்களிடம் ஒரு எளிய பேனாவை பரிசாக கேட்கும் பழக்கமுள்ள பிரேம்குமார் பார்த்திபனிடமும் அப்படி கேட்டுள்ளார்.
பார்த்திபன் கொடுத்த பரிசு
இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குனர் பிரேம்குமார், “நான் பார்த்திபனிடம் நீங்கள் எழுதிய பேனா அல்லது பயன்படுத்திய பேனா இருந்தாலும் கொடுங்கள். அதைவிட எனக்கு பெரிதாக பரிசு வேண்டாம் என்று கூறினேன். அப்போது கையில் ஒரு பெரிய பாக்ஸ் எடுத்துக் கொண்டு என்னை பார்க்க வந்ததும் நான் ஆடிப் போய் விட்டேன். தொடர்ந்து எனக்கு வாழ்த்து கூறியதுடன் கட்டியணைத்த பார்த்திபன், ‘சமீபத்தில் நடந்த பேனா கண்காட்சியில் விலை உயர்ந்த அனைத்தையும் உங்களுக்காக வாங்கி வந்து விட்டேன்.
இதில் பிடித்ததை எடுத்துக்க கொள்ளுங்கள்’ என கூறினார். நான் இப்படிப்பட்ட விலை மதிப்புள்ள பேனாக்களை பார்த்தது கூட இல்லை. பித்தளை மற்றும் செப்பில் செய்த இரண்டு பேனாக்கள் இருந்தது. அதில் நீங்களே ஒன்றை தேர்வு செய்து கொடுங்கள் என பார்த்திபன் சாரிடம் கூறினேன்” என பிரேம் குமார் கூறியுள்ளார்.