இந்தியாவில் வருமான வரி செலுத்துவோருக்கும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கும், வங்கிகள் பண பரிவர்த்தனைக்கும் மற்றும் நிறுவனங்களின் வரவு செலவிற்கும், வெளிநாட்டுப் பணம் பெற, அனுப்ப முக்கிய ஆவணமாக பான்கார்டு விளங்குகிறது. வருமான வரித்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த பான்கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் Permanent Account Number (PAN) பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. 10 இலக்க குறியீட்டில் எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் இடம்பெற்றிருக்கும்.
தற்போது பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் அடையாள ஆவணங்களில் ஒன்றான பான்கார்டை தற்போது ஆதார் அட்டை போல் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக பான்கார்டு 2.0 என்ற நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 1435 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் சிறப்பம்சங்களைக் காணலாம்.
PAN 2.0 முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் வருகிறது. மேலும் பான் எண்ணை குறிப்பிட்ட துறைகளுக்கு ஒரே அடையாளமாகப் பயன்படுத்தும் வண்ணம் போர்டல் உருவாக்கப்பட்டு அதன் கீழ் செயல்படும் வகையில் மாற்றப்படுகிறது.
போன் மூலம் வங்கிக்கணக்கை அப்டேட் செய்ய முடியுமா? புதிய வகை மோசடி..!
மேலும் சைபர் குற்றங்களிலிருந்து தப்பிக்க கடினமான பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. பயனர்களின் தகவல்கள் தற்போது இருப்பதலிருந்து இன்னும் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முயற்சிக்கு PAN 2.0 ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். வரி செலுத்துவோருக்கு எளிதில் தங்களது கணக்குகளைக் கையாள உதவும். PAN தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அணுகலை வழங்கும்.
தற்போது உள்ள உங்கள் பான் எண்ணை மாற்றாமலேயே புதிய PAN 2.0 திட்டம் அப்டேட் செய்யப்படும். இவ்வாறு பல சிறப்புகள் PAN 2.0 திட்டத்தில் அடங்கியிருக்கிறது. மேலும் இதற்காக கணக்குதாரர்கள் தனிப்பட்ட செலவு ஏதும் செய்யத் தேவையில்லை. அனைத்து சேவைகளும் இலவசமாகவே வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.