சீனியர் வீரர்களால கூட முடியல.. ஆனா 13 வயசுலயே ஐபிஎல் ஏலத்தில் சரித்திரம் எழுதிய சுட்டிப்பையன்..

By Ajith V

Published:

ஐபிஎல் தொடரில் முதல் சுற்றில் எந்த அணிகளாலும் தேர்ந்தெடுக்கப்படாத வீரர்கள் இரண்டாவது ரவுண்டிலும் தேர்வு செய்யாமல் போயுள்ளனர். அதில் ஐபிஎல் தொடரில் பலராலும் மறக்க முடியாத ஒரு வீரராக இருந்து வந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இரண்டாவது சுற்றிலும் Unsold என அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல இந்திய அணி வீரரான பிரத்வி ஷாவையும் இரண்டாவது சுற்றில் யாரும் எடுக்க முன்வரவில்லை.

ஆனால் அதே நேரத்தில் இதே ஐபிஎல் மெகா ஏலத்தில் வெறும் 13 வயதான வீரர் ஒருவர் சரித்திரம் எழுதியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி என்ற வீரர் சமீப காலமாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். சிறந்த பேட்ஸ்மேனான இவர், U19 ஆசிய கோப்பை இந்திய அணிக்காகவும் தேர்வாகி உள்ளார்.

13 வயதில் சரித்திரம்..

சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் சதமடித்திருந்த வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தார். அதே சமயத்தில், ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் பதிவு செய்து கொள்வதற்கான காலமும் நெருங்கி வந்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி தனது பெயரை பதிவு செய்திருந்தாலும், ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் இடம் பெறுவாரா என முதலில் கேள்வி இருந்தது.
Vaibhav in RR

அப்படி ஒரு சூழலில் தான் மெகா ஏலத்திற்கு முன்பான இறுதி பட்டியலிலும் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இருந்தாலும் அடுத்த படியாக, டி20 போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்களே புறக்கணிக்கப்படும் போது வைபவ் சூர்யவன்ஷி எப்படி தேர்வாவார் என்ற குழப்பங்கள் இருந்து வந்தது.

டிராவிட்டின் சாமர்த்தியம்

இதனிடையே தான் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி உள்ளது. ராகுல் டிராவிட் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நிலையில் அவர் பல இளம் வீரர்களுக்கான அங்கீகாரத்தை சரியாக கொடுத்து வருகிறார். இதனால் 13 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷியிடம் நிச்சயம் சிறந்த திறன் இருப்பதாக அவர் கணித்து அதனை தனது ஐபிஎல் அணிக்காக பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்த திட்டத்தை வகுத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
VAIBHAV IN RAJASTHAN ROYALS Auction

ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட வீரர்கள் இடம்பெற்று வரும் நிலையில் முதல் முறையாக ஒரு 13 வயது வீரர் ஒரு அணிக்காக தேர்வாகியுள்ளதும் புதிய சரித்திரத்தை ஐபிஎல் வரலாற்றில் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.