கோலியையே தனது பந்தால் திணற வைத்தவர்.. சிஎஸ்கே 2 கோடிக்கு சொந்தமாக்கிய இளம் வீரரின் அசத்தல் பின்னணி..

By Ajith V

Published:

ஐபிஎல் மெகா ஏலம் ஆரம்பமாவதற்கு முன்பாக ரசிகர்கள் எந்த அளவுக்கு அதன் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தார்களோ அதைவிட ஒரு மடங்கு விறுவிறுப்பும் ஆர்வமும் அதிகமாக தான் இருந்து வந்தது. என்னதான் ஆரம்பத்தில் சில வீரர்களை தக்க வைத்துக் கொண்டு தங்களின் பழைய அணியை வடிவமைக்க வேண்டும் என நினைத்தாலும் புதிய வீரர்கள் வருகை நிறைய அணிக்கு புத்துணர்ச்சியாக தான் அமைந்துள்ளது.

அது மட்டுமில்லாமல் முந்தைய சீசனில் இருப்பது போல பழைய அணியாக இல்லாமல் ஒரு புத்தம் புது பொலிவுடன் விளங்கி வருவது நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் அழகு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஏலத்தில் ஆர்சிபி, குஜராத், லக்னோ உள்ளிட்ட அணிகள் பல சிறப்பான வீரர்களை தேர்வு செய்திருந்தது.ஆனால் அதே நேரத்தில் இந்த அணிகளை தாண்டி சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தான் தற்போது மிக குஷியாக இருந்து வருகின்றனர்.

மும்பை, சிஎஸ்கே மாஸ்டர் பிளான்

இந்த இரண்டு அணிகளும் எப்படிப்பட்ட புதிய வீரர்களை எடுத்தாலும் ஐபிஎல் போட்டிகள் என வரும்போது மிகச்சிறப்பாக அவர்களைத் தயார் செய்து தொடர் வெற்றிகளை குவிக்கவும் முயற்சி செய்வார்கள். அந்த வகையில் இந்த முறையும் மெகா ஏலத்தின் தொடக்கத்தில் இரண்டு அணிகளும் மிக அமைதியாக தான் இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பின்னர் இரு அணியினரும் பட்டையை கிளப்பி வீரர்களை திட்டம் போட்டு தேர்வு செய்திருந்தது. அந்த வகையில் கான்வே, ரவீந்திரா, அஸ்வின், ராகுல் திரிபாதி, சாம் குர்ரான், தீபக் ஹூடா, நாதன் எல்லிஸ் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ள பல வீரர்கள் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டு அணிக்காக முதல் தரப் போட்டிகளில் ஆடிவரும் குர்ஜப்நீத் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

கோலியையே திணற வைத்தவர்..

தமிழ்நாட்டு அணிக்காக பல முதல் தர போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியுள்ள குர்ஜப்நீத் சிங், இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் விராட் கோலிக்காகவும் நிறைய பந்துகளை வீசியிருந்தார் குர்ஜப்நீத் சிங். இதில் சிலவற்றை எதிர்கொள்ள முடியாமல் சிக்கித் தவித்த கோலி, அவுட்டாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
CSK Gurjapneet Singh

இதே போல ஒரு பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்து வீச வேண்டுமென்ற சில நுணுக்கங்களையும் குர்ஜப்நீத் சிங்கிற்கு சொல்லிக் கொடுத்துள்ளார் கோலி. அப்படி கிரிக்கெட் அரங்கின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை திணற வைத்த குர்ஜப்நீத் சிங் தற்போது சென்னை அணியில் இடம்பிடித்துள்ளது நிச்சயம் அவர்களுக்கு பலம் சேர்க்கும் என்றும் தெரிகிறது. இவர் சென்னை அணியிலும் நெட் பந்து வீச்சாளராக இருந்துள்ளதுடன் டிஎன்பிஎல் தொடரிலும் கலக்கி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.