ஏடிஎம் இல் வந்த பணத்தை முழுவதுமாக எடுக்காமல், லட்சக்கணக்கில் மோசடி செய்த இருவரை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்து, காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க அனைத்து வழிமுறைகளையும் செய்துவிட்டு, பணம் வந்த பின், அந்த பணத்தை முழுவதுமாக எடுக்காமல் ஒரே ஒரு நோட்டை மட்டும் விட்டுச் செல்கின்றனர். இதனை அடுத்து, ஏடிஎம் மெஷின் “பணம் வாடிக்கையாளர் எடுக்கவில்லை” என்று நினைத்து, சில நிமிடங்களில் “டைம் அவுட்” எனக் காண்பித்து, பணத்தை உள்ளே இழுத்துக் கொள்கிறது.
ஆனால், ஒரே ஒரு ரூபாய் நோட்டை மட்டுமே உள்ளே இழுத்தது ஏடிஎம் மெஷினுக்கு தெரியாது என்பதால், பணம் திரும்ப பெற்றதாக வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. வங்கி அக்கவுண்டிலும் மீண்டும் அவர்கள் எடுத்த பணம் திரும்ப வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம், பணத்தை முழுவதுமாக எடுக்காமல் வங்கி மற்றும் ஏடிஎம்மை ஏமாற்றி, மர்ம நபர்கள் இருவர் மோசடி செய்துள்ளனர்.
குறிப்பிட்ட வங்கி அக்கவுண்டில் மட்டும் பணம் செலுத்திய தொகைக்கும் எடுத்த தொகைக்கும் இடையே வித்தியாசம் உள்ளதை கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள், ஏடிஎம் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது இந்த மோசடியை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். தற்போது, காவல்துறையினர் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.