முதல் வீரராக.. ஏலத்தில் 25 கோடி ரூபாயை தாண்டி.. இந்திய வீரரின் சாதனையை அரைமணி நேரத்தில் உடைத்த ஷ்ரேயஸ்..

By Ajith V

Published:

ஐபிஎல் வரலாற்றிலேயே கடந்த ஆண்டு தான் இரண்டு வீரர்கள் முதல் முறையாக 20 கோடி ரூபாயை தாண்டி புதிய சரித்திரத்தை எழுதியிருந்தனர். எந்த இந்திய வீரருக்குமே இதுவரை அப்படி ஒரு சிறப்பு கிடைக்காத நிலையில் முதல் முறையாக இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் 20 கோடி ரூபாயை கடந்திருந்தனர். அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20. 50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

இதே போல, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 24 கோடி ரூபாயை கடந்திருந்ததுன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இந்த தொகையை அடுத்த ஏலங்களில் ஏதாவது வீரர்கள் தாண்டுவார்களா என்று ரசிகர்கள் வியந்து பார்த்து வந்த நிலையில், இந்த முறை அப்படி ஒரு அசத்தலான வரலாற்று சம்பவம் ஐபிஎல் ஏலத்தில் நடைபெற்றுள்ளது.

எதிர்பார்ப்பில் இருந்த இந்திய வீரர்கள்

இந்த முறை டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என பல அணிகள் எடுத்த முடிவு காரணமாக இந்திய வீரர்களான ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் ஏல பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். இதனால், நிச்சயம் இவர்களில் யாராவது ஒருவர் கம்மினிஸ் மற்றும் ஸ்டார்க்கின் தொகையை முறியடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் ஐபிஎல் மெகா லத்தின் ஆரம்பத்தில் முதல் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. இவரை எடுக்க சென்னை, டெல்லி, ஹைதராபாத், குஜராத் உள்ளிட்ட பல அணிகள் போட்டி போட்டிருந்தது. 18 கோடி ரூபாய்க்கு அர்ஷதீப் சிங்கை பஞ்சாப் அணி மீண்டும் ஆர்டிஎம் முறையில் தக்க வைத்துக் கொண்டது.

வரலாறு படைத்த ஷ்ரேயஸ் ஐயர்

இதனைத் தொடர்ந்து ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் சொந்தமாக்கி இருந்தது. தொடர்ந்து வந்த இந்திய அணி வீரரும், கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக கொல்கத்தா அணி உள்ளே வர, கடைசி கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகி இருந்தது. 20, 25 கோடி ரூபாய் என ஷ்ரேயஸ் ஐயர் தாண்டிக் கொண்டிருக்க, கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கிவிட்டது.

இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் 25 கோடி ரூபாயை கடந்த முதல் வீரர் என்ற பெயரும் ஷ்ரேயஸ் ஐயருக்கு கிடைத்துள்ளது. அந்த அணி இளம் வீரர்களை மட்டுமே தக்க வைத்திருப்பதால் ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. அதே போல, அர்ஷ்தீப் சிங் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் போய் சாதனை படைத்த கொஞ்ச நேரத்திலேயே அதனை ஷ்ரேயஸ் ஐயர் தாண்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.