சென்னை கிண்டியில் டாக்டரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு

By Keerthana

Published:

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை புற்று நோய் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, கடந்த 13ம் தேதி அவரது அறையில் விக்பேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியிருந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விக்னேஷை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில், மக்கள் அதிகம் கூடும் ஆயுதம் எடுத்து வந்து, தாக்குதல் நடத்தியுள்ளார். விசார்ணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 13ம் தேதி என்ன நடந்தது: சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு டாக்டராக பாலாஜி (வயது 53) பணிபுரிந்து வருகிறார். கடந்த 13ம் தேதி காலை 10.30 மணி அளவில் டாக்டர் அங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் இருந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே வந்த விக்னேஷ் என்பவர் டாக்டர் பாலாஜியிடம் காரசாரமாக பேசினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்ற தன்னுடைய தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று வாக்குவாதம் செய்தார்.

சரியான முறையில்தான் உங்கள் தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று டாக்டர் பதில் கூறியுள்ளார். இருந்த போதிலும், ஆத்திரம் அடங்காத அந்த விக்னேஷ் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெறித்தனமாக டாக்டர் பாலாஜியை சரமாரியாக குத்தத்தொடங்கினார். அதிர்ச்சியில் நிலைகுலைந்துபோன அவர், என்ன செய்வதென்று தெரியாமல் அலறித்துடித்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்ற நோயாளிகளின் உறவினர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஓடிவந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த டாக்டர் பாலாஜியை தூக்கி ஸ்டெக்சரில் படுக்கவைத்து அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு வேகமாக கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். அவரது தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்பட 7 இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. அதே நேரத்தில், டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய வாலிபர், சாவகாசமாக ரத்தம் சொட்டச் சொட்ட கையில் வைத்திருந்த கத்தியை தூக்கி எறிந்துவிட்டு, மருத்துவமனை வளாகத்தில் நடந்து வெளியே சென்றார். அவரை பின்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் செக்யூரிட்டி காவலாளிகள் பிடிக்க முயன்றனர்.

வெளியே நின்ற நோயாளிகளின் உறவினர்கள் விக்னேஷை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர், அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து விரைந்து வந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விக்னேஷ் (25) , சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர் காமராஜர் நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் என்பதும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது தாயார் பிரேமா (51) கடந்த 6 மாத காலமாக கிண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பம் தெரியவந்தது. கைதான விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.