பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் தொடங்கிய நிலையில், இந்திய அணி மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் உருவாகியிருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சிறப்பாக அமையாததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து வென்று வரும் இந்திய அணி இந்த முறையும் சிறந்த கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு மத்தியில் இந்திய அணியில் ராகுல், கோலி, பும்ரா, சிராஜ் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் சற்று குறைவாகத்தான் இருந்தனர். இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல் என ஆஸ்திரேலிய மண்ணில் அனுபவம் இல்லாத இளம் வீரர்களும் அணியில் இடம் பிடித்திருந்தனர். மேலும் முதல் டெஸ்ட் கேப்டனாக இருந்த பும்ரா டாஸ் வென்றதுடன் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார்.
ஆரம்பமே சரியா அமையல..
அதன்படி ஆடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் மூன்றாவது வீரராக உள்ளே வந்த தேவ்தத் படிக்கல் என இரண்டு பேருமே டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தனர். தொடர்ந்து நான்காவது வீரராக உள்ளே வந்த விராட் கோலி மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாற்றம் கண்டு வந்த விராட் கோலி இந்த ஆண்டு நடந்த சர்வதேச போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் விராட் கோலியின் கம்பேக்கிற்கு காரணமாக இருக்கும் என்றும் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்காக நிச்சயம் பாடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
17 வருசத்துல பார்க்காத சரிவு..
ஆனால் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலேயே விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை விமர்சனத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. 12 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட விராட் கோலி வெறும் ஐந்து ரன்கள் மட்டும் எடுத்திருந்த நிலையில் ஹேசல்வுட் பந்து வீச்சில் மோசமாக அவுட்டாகி இருந்தார். இதற்கிடையே தான் கடந்த 17 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகள் ஆடத் தொடங்கியதில் இருந்து காணாத சரிவை இந்த ஆண்டு தனது பயணத்தில் கண்டுள்ளார் கோலி.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் விராட் கோலியின் பேட்டிங் சராசரி குறைந்தபட்சம் 30 க்கு மேலாக இருந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் அவரது சர்வதேச பேட்டிங் சராசரி 19. 72 ஆகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மட்டும் மீதம் இருக்க, அதற்குள் ஒரு நல்ல சராசரியை கோலி எட்டி விடுவாரா என்று கேட்டால் நிச்சயம் சந்தேகம் தான்.