அலறியடித்தபடி பறந்த ஆம்புலன்ஸ்.. வழிவிடாமல் பிளாக் செய்த கார்.. கொந்தளிக்க வைத்த வீடியோ.. இறுதியில் நடந்தது என்ன?..

By Ajith V

Published:

சமீபத்தில் கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இருந்த நிலையில் மக்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அதற்கு பின்னர் போலீசார் எடுத்த நடவடிக்கை தொடர்பான செய்தியும் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. வீட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது பொது இடங்களில் விபத்து ஏதேனும் நிகழ்ந்தாலோ அங்கு முதல் ஆளாக வந்து நிற்பதே ஆம்புலன்ஸ் தான்.

ஆம்புலன்ஸை வழிமறித்த கார்

அதன் ஓட்டுனர்கள் தங்களின் உயிரையே பொருட்படுத்தாமல் காயமடைந்தவர்களை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இதற்காக நாம் சாலைகளில் செல்லும்போது பல இடங்களில் சைரனை அதிக ஒலியுடன் எழுப்பிக் கொண்டு மிக வேகமாக பறக்கும் ஆம்புலன்ஸ் வரும்போது அனைத்து வாகனங்களுமே வழி விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

ஆனால் சமீபத்தில் கேரளாவில் நடந்த சம்பவம் ஒன்று அப்படியே நேர்மாறாக அமைந்திருந்தது. திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று சாலக்குடி சாலையில் விரைந்து போய்க் கொண்டிருந்துள்ளது. பொன்னானி என்னும் பகுதியில் இருந்து அந்த ஆம்புலன்ஸ் மருத்துவ கல்லூரிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை முன்னோக்கி வேகமாக செல்ல விடாமல் கார் ஒன்று வழிமறித்து கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.

கொந்தளிக்க வைத்த வீடியோ

அந்த ஆம்புலன்ஸ் டிரைவரோ ஹாரன் அடித்தும், சைரனை அதிக ஒலி எழுப்பி பார்த்தும் அந்த நபர் ஓவர் டேக் செய்யவிடாமல் மறித்தபடி சாலையில் சென்று கொண்டிருந்தார். மேலும் அந்த ஆம்புலன்ஸ் ஓவர்டேக் செய்ய நினைத்தாலும் அதனையும் பிளாக் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பான வீடியோ ஆம்புலன்ஸில் இருந்த Dash Cam மூலம் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Car in kerala Block Ambulance

அந்த ஆம்புலன்ஸிற்கு இருக்கும் அவசரம் என்ன என்பதே தெரியாமல் இப்படியா மோசமாக சாலையில் வண்டியை ஓட்டுவது என பலரும் வெகுண்டு எழுந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதனிடையே இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் தற்போது அந்த கார் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாய்ந்த அதிரடி நடவடிக்கை

சம்பந்தப்பட்ட நபர் ஜெயிலிலேயே பல நாட்கள் கிடக்க வேண்டுமென பலரும் கருத்து வெளியிட்டு வந்த நிலையில் தற்போது போலீசார் அந்த நபர் வீட்டிற்கு சென்றதுடன் அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதித்து லைசன்ஸை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அபராத தொகை அதிகமாக இருந்ததுடன் லைசன்ஸும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இனிமேல் பலரும் இப்படி ஆம்புலன்ஸை வழிமறித்துச் செல்ல பயப்படுவார்கள் என்றும் இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.