ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை ஏற்படுத்தி தரும் நிலையில் அடுத்த கட்டமாக சினிமா டிக்கெட் உட்பட மேலும் சில வகை டிக்கெட்டுகளையும் ஜொமேட்டோ செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் எடுத்து அதை டெலிவரி செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ, அடுத்த கட்டமாக பேடிஎம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நிறுவனத்தின் சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் வசதியை விலைக்கு வாங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது “டிஸ்ட்ரிக்ட்” என்ற புதிய செயலியை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலம் சினிமா டிக்கெட், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட் மற்றும் ஹோட்டல்களில் டைனிங் டேபிள் ரிசர்வ் செய்வது உட்பட பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு மொபைல்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், பிவிஆர், ஐநாக்ஸ் உள்பட இந்தியாவில் உள்ள எந்த ஒரு சினிமா தியேட்டரிலும் சினிமா டிக்கெட்டுக்களை புக் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் கிரிக்கெட் உள்பட விளையாட்டு போட்டிகளை நேரடியாக கண்டு ரசிக்கவும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இந்தியாவில் உள்ள முன்னணி ரெஸ்டாரண்டுகளில் டேபிள் புக் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புக் மை ஷோ மற்றும் டிக்கெட் நியூ ஆகிய இரண்டு இணையதளங்கள் இந்தியாவில் சினிமா டிக்கெட்டுகளை புக் செய்யும் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் நிலையில், தற்போது அதில் ஜொமோட்டோ நிறுவனமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.