அயர்லாந்து நாட்டில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பாக 21 வயதில் இளம் பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் இத்தனை நாட்கள் கழித்து அந்த வழக்கில் ஒரு புதிய திருப்பம் உருவாகியுள்ளது. இந்த உலகில் காணாமல் போன நபர்கள் தொடர்பான வழக்குகள் ஒவ்வொரு நாட்டிலும் ஏராளம் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அவற்றில் தொடர்ந்து பல விஷயங்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் என்றாவது ஒருநாள் அந்த வழக்கில் தீர்வு கிடைத்து விடாதா என சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் நினைத்து வருவார்கள்.
அந்த வகையில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோ ஜோ டல்லார்டு (Jo Jo Dullard) என்ற 21 வயதே ஆன இளம்பெண் கடந்த 1995ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டார். சுமார் 29 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் இது தொடர்பாக யாருமே கைது செய்யப்படவில்லை. மேலும் ஜோ ஜோ இருக்கிறாரா இல்லையா என்பதும் தெரியாமலே இருந்து வந்தது. என்றாவது ஒருநாள் ஜோ ஜோ காணாமல் போனது தொடர்பாக நீதி கிடைத்து விடும் என்றும் அவர்கள் மீது குடும்பத்தினர் நீண்ட ஆண்டுகளாக காத்திருந்து வருகின்றனர்.
கடைசி வாரத்தை..
அப்படி இருக்கையில் தான் ஜோ ஜோ காணாமல் போனது தொடர்பாக தற்போது 50 வயதாகும் நபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜோ ஜோ கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கடைசியாக தனது தோழி ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “எனக்கு ஒரு லிப்ட் கிடைத்து விட்டது. பிறகு பார்க்கலாம்” என பேசி உள்ளார். அதன் பின்னர் அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.
ஜோ ஜோ டல்லார்டு ஒரு இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்து மணியளவில் இருந்த கடைசி பேருந்தை தவறவிட்ட நிலையில் லிஃப்ட் கேட்டு அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் அவர் ஒரு காரில் ஏறிச் சென்றதாகவும் தெரியவந்த நிலையில் தான் கடந்த 2020 முதல் இது கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதுவரையிலும் அவரை யாராவது கடத்திச் சென்று எங்கேயாவது உயிரோடு வைத்திருக்கலாம் என்றுதான் கருதப்பட்டு வந்தது.
போலீசில் சிக்கிய நபர்
ஆனால், இதன் பின்னர் இந்த வழக்கிலும் திருப்புமுனை உருவாகி உள்ளது. கடைசியாக ஜோ ஜோவை அந்த இரவு நேரத்தில் பார்த்த ஒருவருக்கு தற்போது 50 வயதாகும் நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல் அவருக்கு சொந்தமான இடத்தில் தற்போது முழுமையாக தோண்டி அதற்குள் ஏதேனும் உடல் புதைக்கப்பட்டுள்ளதா என்றும் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஜோ ஜோ இறந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இன்னும் சில தினங்களில் இது தொடர்பாக முழு விவரமும் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.