தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டில் நிறைய எதிர்பாராத திருப்புமுனைகளை கண்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையும், இந்த படம் ஓடுமா என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருந்தது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் இந்த ஆண்டு பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவான ராஜன் திரைப்படமும் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பட்டையை கிளப்பியிருந்தது. மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி இருந்த நிலையில் அனைத்துமே கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. ஆனால் அதே நேரத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வசூலை அள்ளிய அமரன்
இவை அனைத்தையும் தாண்டி இளம் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை தொட்டு முக்கியமான ஒரு சாதனையும் புரிந்திருந்தது. இதற்கு மத்தியில் தான் சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருவதுடன் வசூல் ரீதியாகவும் வரும் நாட்களில் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 வருட இடைவெளியில் வியப்பான ஒற்றுமை
அப்படி ஒரு சூழலில் தான் 2014 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களிலும், 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களிலும் இருக்கும் சில ஒற்றுமைகள் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தை (கோச்சடையான்) நடித்திருந்தார். இதே போல அதே ஆண்டில் மற்றொரு திரைப்படமும் ரஜினி நடிப்பில் (லிங்கா) வெளியாகியிருந்தது.
இதே போலத்தான் நடப்பு ஆண்டில் தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். மேலும் 2014 ல் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்திலும், 2024 ஆம் ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திலும் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும் இந்த இரண்டிலுமே ஒரு கேரக்டரின் பெயர் ஜீவா (ஜீவன்) என இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சூர்யா, விஜய், ரஜினி, தனுஷ், SK படங்கள்
கடந்த 2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே திரைப்படமும், 2024 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படமும் ஏ. ஆர். முருகதாஸின் அசிஸ்டன்ட் இயக்குனர்களால் இயக்கப்பட்டிருந்தது. மேலும் 2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் அவரது 25வது படமாக வெளியான வேலையில்லா பட்டதாரி பெரிய அளவில் ஹிட்டானது.
அதே போல 10 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியான தனுஷின் ராயன் திரைப்படமும் அதிக வசூலை ஈட்டி சாதனை புரிந்துள்ளது. இவை அனைத்தையும் தாண்டி 2014 ஆம் ஆண்டில் சூர்யா நடிப்பில் தயாரான அஞ்சான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. ஆனால் அந்த திரைப்படம் வெளியானதற்கு பின்னர் தற்போது வரை மீம் மெட்டீரியலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதே போல தான் சூர்யா நடிப்பில் கங்குவா ஷூட்டிங் ஆரம்பமானது முதலே அதன் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது வெளியானதன் பின்னர் அதிகமாக விமர்சனத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் இருக்கும் ஒற்றுமைகள் ரசிகர்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.