தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என குறிப்பிட்டதுமே உடனடியாக நம் நினைவுக்கு வருவது இயக்குனர் ஷங்கர் தான். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் அதிகம் விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் அதன் முன்பு அவர் இயக்கிய பல திரைப்படங்கள் இந்தியாவைத் தாண்டி சர்வதேச அளவிலும் பெயர் எடுத்திருந்தது.
இனிவரும் திரைப்படங்களில் தனது இயக்கத்தில் உள்ள தவறுகளை சரி செய்து கொண்டு பல ஹிட் படங்களை முன்பு போல் ஷங்கர் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையில் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கிடையே நண்பன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அசோசியேட் இயக்குனர் ஒருவர் செய்த தவறுக்காக ஜூனியர் ஆர்ட்டிஸ்டிடம் ஷங்கர் மன்னிப்பு கேட்ட தகவல் தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சங்கடமா இருந்துச்சு..
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ஒரே ஒரு திரைப்படம் தான் ‘நண்பன்’. ஹிந்தியில் அமீர் கான் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்த 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் தான் நண்பன். இதில் விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அப்போது இந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியின் சூட்டிங்கின் போது நடந்த சம்பவத்தை பற்றி நடிகர் ஸ்ரீகாந்த் சில கருத்துக்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“நண்பன் படத்தில் ஒரு ரேகிங் காட்சி வரும். அதில் நானும், ஜீவாவும் அண்டர் வியர் போட்டபடி இருப்போம். அந்த நேரத்தில் மிகவும் சங்கடமான நிலை என்னவென்றால் 200 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் 250 படக்குழுவினர்கள் என சுமார் 500 பேர் முன்னிலையில் அம்மணமாய் நிற்பது போன்ற ஒரு உணர்வு இருந்தது தான். அப்படி ஒரு கொடுமை இருக்கவே முடியாது.
மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஷங்கர்
அப்போது ஒரு காட்சியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் விஜய்யை சுற்றி வந்து அவரது பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றும் காட்சியில் நடிக்க வேண்டும். அந்த ஷாட் 12 முதல் 13 டேக் போனது. ‘எப்படியாவது அதை பண்ணி முடித்துவிடு, காலில் கூட விழுகிறோம்’ என நானும் ஜீவாவும் கூறிக் கொண்டே இருந்தோம். திடீரென படத்தின் அசோசியேட் இயக்குனர் கோபப்பட்டு, ‘அறிவில்லை உனக்கு. எத்தனை தடவ நடிப்பே’ என அந்த ஆர்டிஸ்டை திட்டி விட்டார்.
அப்போது அங்கே வந்த ஷங்கர், தனது அசோசியேட் இயக்குனரிடம், ‘என்ன கத்துறீங்க. ஆர்ட்டிஸ்ட் தப்பா பண்ணுவாங்க. அதை சொல்லிக் கொடுக்குறது நான் நம்ம வேலை. அப்படினா நாம சரியா சொல்லி கொடுக்கலனு அர்த்தம்’ என ஆவேசம் அடைந்தார். பின்னர் அந்த ஜூனியர் ஆர்டிஸ்டிடமும் ஷங்கர் சார் மன்னிப்பு கேட்டார். இதன் பின்னர் அடுத்த டேக்கிலேயே அந்த நபர் சரியாக நடித்துவிட்டார்” என ஸ்ரீகாந்த் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.