வெள்ளி விழா கொண்டாடத் தயாராகும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு..

By John A

Published:

இந்திய துணைக் கண்டத்தில் வட முனையில் எப்படி இமயமலை அடையாளமாக இருக்கிறதோ.. அதேபோல் தென்முனையில் முக்கடலும் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி கடலின் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கிறது திருவள்ளுவர் சிலை. விவேகானந்தர் பாறைக்கு அருகே திருக்குறளின் 133 அதிகாரங்களை நினைவுப்படுத்தும் வகையில் 133 அடியில் உறுதியான பாறைகளின் மேல் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டில் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த போது ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்தார். இதனை வடிவமைத்தவர் சிற்பி கணபதி ஸ்பதி. இவரது தலைமையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், சிற்பிகளும் கடலுக்கு நடுவில் 133 அடி (41 மீட்டர் உயரம்) கொண்ட இந்த சிலையை 1990-ல் நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 1997-ல் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு 2000-வது ஆண்டில் முழுமை பெற்றது.

நிலநடுக்கம், மழை, புயல், உப்புக் காற்று என எந்த இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்படாதவாறு அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம் இந்தியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கடந்த 2004-ல் சுனாமி வந்த போது கூட இச்சிலைக்கு எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை. மேலும் வருடந்தோறும் இந்தச்சிலையை பராமரிக்கும் விதமாக ரசாயனக் கலவை பூசப்படுகிறது. இந்தச் சிலை திறப்பின் போது தான் அப்போதைய முதல்வர் கருணாநிதி இனி திருவள்ளுவரை அய்யன் திருவள்ளுவர் என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

100 கோடி செலவில் சென்னையில் அமையப் போகும் பிரம்மாண்டம்.. நந்தவனமாகப் போகும் ஈசிஆர் சாலை

இந்தச் சிலை அமைக்கப்பட்டு நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. எனவே திருவள்ளுவர் சிலை அமைத்து 25-வது ஆண்டினைக் கொண்டாடும் விதமாக வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களிலும் தமிழக அரசின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்ச் சங்கங்கள், தமிழறிஞர்கள், வெளிநாட்டு அறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். மேலும் திருவள்ளுவரின் மேன்மையை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியருக்கு திருக்குறள் குறித்த போட்டிகள் நடைபெற உள்ளது. அதுமட்டுமன்றி சோஷியல் மீடியாக்களிலும் திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.