முன்பெல்லாம் பள்ளிகளில் சமூக சீர்திருத்தப் படங்கள் மாணவர்களுக்குத் திரையிடப்படும். அதில் தலைவர்களின் வரலாற்றுப் படங்கள், ஆவணப் படங்கள் அல்லது ஏதாவது காமிக் படங்கள் எனத் திரையிடப்படும். இதற்காக மாணவர்களிடம் ஒரு சிறிய தொகை வசூல் செய்யப்பட்டு குறிப்பிட்ட நாளில் மொத்த பள்ளி மாணவர்களுக்கும் படம் திரையிடப்படும் அல்லது திரையரங்குக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
ஆனால் இங்கு ஒரு பள்ளியில் வேட்டையன் படமும், கோட் படமும் திரையிடப்பட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் மகளிர் மேனிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தினைச் சேர்ந்த பல மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தீபாவளிப் பண்டிகை விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வேலை நாளாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து அன்றைய தினம் இப்பள்ளி செயல்பட்டது.
ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ்.. இந்த சூப்பர்ஹிட் பாட்டு இந்தப் படத்துல தானா?
இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவியர்கள் குஷியாகினர். ஏனெனில் அன்றைய தினம் பள்ளியில் விஜய் நடித்த கோட் படம் திரையிடப்பட்டிருக்கிறது. இது போதாது என்று மதிய இடைவேளைக்குப் பிறகு 1-5 வரை பயிலும் மாணவிகளுக்கு ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் திரையிடப்பட்டிருக்கிறது. மாணவர்கள் இதை ரசித்துப் பார்த்தாலும் கல்வி நிலையங்களில் எப்படி இதுபோன்ற திரைப்படங்களை திரையிடலாம் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.
மேலும் மாணவிகளிடம் கோட் படத்திற்காக ரூ. 25-ம், வேட்டையன் படத்திற்காக ரூ. 10-ம் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி இயக்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரும், கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்த நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அதிகாரிகளை அனுப்பி விசாரணை செய்ததில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியாக படம் திரையிடப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய திரைப்படங்களை பள்ளியில் ஒளிபரப்பிய விவகாரம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.