மறைந்த டெல்லி கணேஷ் பற்றி தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அவரின் நடிப்புத் திறமை, மனிதாபிமானம், இரக்க குணம், யதார்த்தமான பேச்சு போன்றவை பற்றி வீடியோக்கள் இணையத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, டெல்லி கணேஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார் என்பது பலரும் அறியாத செய்தி. அதிலும் இலங்கை வானொலியைக் கலக்கிய பாடலும் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது.
டி.ராஜேந்தர் கதையில் ஈ.எம். இப்ராஹிம் இயக்கத்தில் 1980-ல் வெளிவந்து தமிழ்சினிமாவைப் புரட்டிப் போட்ட படம் தான் ஒருதலை ராகம். இந்தப் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து இயக்குநர் இ.எம். இப்ராஹிம் அடுத்து ஒரு படத்தினை இயக்குகிறார். இதில் ஹீரோ வேறு யாருமல்ல நம் டெல்லி கணேஷ் தான். படத்தின் பெயர் தணியாத தாகம். வெளிவந்த ஆண்டு 1982.
இப்படத்தின் கதை நேர்மையாக தீர்ப்பு சொல்லி ஊரில் பெரிய மனிதராக வாழும் ஒருவர். மனைவியை இழந்த அவரை பதவியிலிருந்தும், புகழிலிருந்தும் வீழ்த்த நினைக்கும் கும்பலிடம் இருந்து எப்படி தன்னைக் காத்து வெல்கிறார் என்பது கதை. கதையின் நாயகனாக டெல்லி கணேஷ். நாயகியாக சுபத்ரா. சின்னிஜெயந்தும் இந்தப் படத்தில் நடித்திருப்பார்.
அந்தக் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி இருப்பார் டெல்லி கணேஷ். அதற்கு முன்னர் கே. பாலச்சந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இந்தப்படம் அவரை ஹீரோவாக உயர்த்தியது. எனினும் ஹீரோவால் அவரால் ஜொலிக்க முடியவில்லை. படம் தோல்வி அடைந்தது- எனினும் இந்த ஒரு பாடல் இலங்கை வானொலியை ஆக்கிரமித்தது. பூவே நீ யார் சொல்லி மலர்கின்றாய் என்ற ஜோடிப் பாடல் டெல்லி கணேஷை பலர் அறிந்து கொள்ளச் செய்தது.
இனிமேல் ஸ்ரீகாந்தை ஹீரோவா வச்சு படம் எடுக்க மாட்டேன்.. கடுப்பான இயக்குநர் ஹரி.. ஏன் தெரியுமா?
இந்தப் பாடலின் ஹிட் காரணமாக டெல்லி கணேஷ் தொடர்ந்து அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிந்தன. எனினும் ஹீரோவாக அல்ல. குணச்சித்திரக் கதாபாத்திரங்களே அதிகம் வந்தது. ஆனாலும் தனது வேலை ரசிகனை மகிழ்விப்பது, நடிப்புத் திறனைக் காட்டுவது என எண்ணி எந்தக் கதாபாத்திரம் வந்தாலும் அதில் தனது திறமையை நிரூபித்தார். சிந்து பைரவி, பசி, அபூர்வ சகோதரர்கள், புன்னகை மன்னன் போன்ற படங்கள் டெல்லி கணேஷை திரைத்துறையில் நிலை நிறுத்தியது.
அதன் தொடர்ச்சியாக காமெடி இவருக்குக் கை கொடுக்க கமலுடன் அதிக படங்களில் பணியாற்றினார். குறிப்பாக நாயகன், தெனாலி, மைக்கேல் மதன காமராசன் போன்றவை தனித்துக் காட்டியது. இப்படி ஹீரோவாக தோற்றாலும் குணச்சித்திரத்தில் இவரை போன்று நடிக்க இன்னொருவர் பிறக்கப் போவதும் இல்லை. வருவதும் இல்லை. யதார்தத்தை திரையில் கொண்டுவருவது தான் இவரின் தனிச்சிறப்பே.