புடவை மற்றும் சுடிதார் அணிந்தால் புற்றுநோய் வரும் என்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வைரல் ஆகி வரும் நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
புடவை, சுடிதார் போன்ற ஆடைகளை அணிபவர்கள் இடுப்பில் இறுக்கமாக அணியும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இடுப்பை சுற்றி பெண்களுக்கு சருமத்தில் புண் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அது கவனிக்கப்படாத நிலையில் புற்றுநோயாக மாறும் ரிஸ்க் இருப்பதையே தற்போது மிகைப்படுத்தி சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது என்று கூறியுள்ளனர்.
இவற்றை தவிர்ப்பதற்காக, இடுப்பை சுற்றி புடவை பாவாடை அல்லது சுடிதார் உடுத்தும் போது தினமும் ஒரே இடத்தில் கட்டாமல் கொஞ்சம் மேலே அல்லது கீழே என மாற்றி மாற்றி கட்டுவது அவசியம். அதேபோல் இறுக்கமாக கட்டாமல் சற்று தளர்வாக கட்டினால் சருமத்தில் பாதிப்பு ஏற்படாது. மேலும், சருமத்தின் தன்மையில் அல்லது நிறத்தில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
புடவை, பாவாடை, சுடிதார் கட்டும் இடத்தில் புண், அரிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் புற்றுநோய் ஆபத்திலிருந்து தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
புடவை அல்லது சுடிதார் இறுக்கமாக கட்டும்போது தொடர் உராய்வு மற்றும் வியர்வை, உடல் சூடு ஆகியவை காரணமாக அந்த பகுதியில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் என்றும், அதன் காரணமாக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.