நீங்கள் 90-களில் பிறந்தவராக இருந்தால் நிச்சயம் சக்திமானைக் கடந்து போயிருக்க வாய்ப்பே கிடையாது. மொழி பேதமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் பம்பரமாய் சுழன்று சுழன்று காந்த சக்தியாக ஈர்த்த சீரியல் தான் சக்திமான். பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணாவின் நடிப்பில் தூர்தர்ஷனில் வெளிவந்த இந்த சீரியல் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ரசிகர்களை மந்திரக் கோலால் கட்டிப் போட்டது.
உலகாளும் மாவீரன் பார் இங்கே.. என்று தமிழில் டைட்டில் தொடங்கும் போதும், சக்தி.. சக்தி.. சக்திமான் என்று கோரஸ் வரும் போதும் சிறுவர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கே போய்விடுவர். மொபைல் போன்கள் இல்லாத காலத்தில் இண்டர்நெட் வளர்ச்சி அடையாத காலத்தில் டிவி சேனல்கள் பெரிதாக இல்லாத காலத்தில் தூர்தர்ஷனே பலரது வீட்டின் முக்கியப் பொழுதுபோக்காக இருந்து வந்தது.
அதிலும் ஞாயிற்றுக்கிழமை ஆனால் வரிசையாக ஸ்ரீ கிருஷ்ணா, சக்திமான், கேப்டன் வியோம் போன்ற சீரியல்களுக்கு அடிமையானவர்கள் நிறைய உண்டு. இன்று எத்தனையோ சூப்பர் ஹீரோக்கள் படங்கள் வந்தாலும் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமான் கொடுத்த தாக்கத்தினை வேறு யாரும் கொடுக்கவில்லை. தீபாவளிக்கு புதுத் துணி எடுப்பதற்கு சக்திமான் காஸ்ட்டியூமை நிறைய சிறுவர்கள் எடுத்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.
ரூ.1 கோடி கொடுத்து வாங்கியதை அம்பானிக்கு இலவசமாக தர தயார்.. குட்டீஸ் அறிவிப்பு..!
நடிகர் முகேஷ் கண்ணா இரு கதாபாத்திரங்களில் இந்த சீரியலில் கலக்கியிருப்பார். கங்காதர் என்ற கதாபாத்திரமும் அவ்வப்போது சூப்பர் ஹீரோவாக மாறி எதிரிகளை துவம்சம் செய்யும் போது சக்திமானாகவும் ஜொலிப்பார்.குறிப்பாக கையை மேலே உயர்த்தி ஒருவிரலைக் காட்டி சுழலும் போது ஏற்படும் கூஸ்பம்ப்ஸ்-க்கு அளவே கிடையாது. இவரைப் போல் சுழன்று காயம் பட்டவர்களும் நிறைய உண்டு. இப்படி 90’s கிட்ஸை தனது அற்புதமான சூப்பர் ஹீரோ நடிப்பால் கட்டிப்போட்ட சக்திமான் தொடர் மீண்டும் வர உள்ளது.
இதுகுறித்து நடிகர் முகேஷ் கண்ணா கூறுகையில், இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமான் தொடர் மீண்டும் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வெகுவிரைவில் மீண்டும் நீங்கள் சக்திமானை எதிர்பார்க்கலாம். சக்திமான் உடையில் அவர் பள்ளியில் சென்று விடுதலைப் போராட்ட வீரர்களை வணங்கி பின்னர் சக்திமான் சீரியலின் மறு ஆக்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.
20 ஆண்டுகள் கழித்து மீண்டும் சக்திமான் ஒளிபரப்பாக உள்ளதால் அன்று பார்த்து ரசித்தவர்களும், அவரிகளின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் இன்று அதே ஆவலுடன் காணக்காத்திருக்கின்றனர். மேலும் அதேபோல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பினால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சக்திமான் சீரியலின் பழைய பாகங்கள் யூடியூப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 எபிசோடுகள் முடிந்திருக்கிறது.