மறைந்த நடிகர் டெல்லி கணேஷூக்கு இந்திய விமானப் படையின் மரியாதை.. தேசியக் கொடி மற்றும் விமானப்படை கொடி போர்த்தி அஞ்சலி

By John A

Published:

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக விளங்கிய நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. 81 வயதான டெல்லிகணேஷ் கே. பாலச்சந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழின் மிகச்சிறந்த குணச்சித்தர நடிகராக விளங்கினார். மேலும் காமெடியிலும் டெல்லி கணேஷ் தனி முத்திரை பதித்தார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக டெல்லி கணேஷ் இந்திய விமானப் படையில் 10 ஆண்டு காலம் பணிபுரிந்திருக்கிறார். சினிமா மீதான ஆசையில் விமானப் படை பணியைத் துறந்து சிறந்த சினிமா கலைஞராக விளங்கினார்.

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டமும், தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். நிஜ வாழ்க்கையைப் போல நடிப்பிலும் தனது யதார்த்தத்தை வெளிப்படுத்தியதால் டெல்லி கணேஷ் அனைவரும் விரும்பும் கலைஞராக வாழ்ந்தார். இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய விமானப் படை சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

எனக்கு இந்த பட்டம் வேண்டாம்… கமல்ஹாசனின் திடீர் அறிவிப்பால் பரபரப்பான திரையுலகம்…

இந்திய விமானப் படை வீரர்கள் அவரது உடலுக்கு தேசியக் கொடி மற்றும் இந்திய விமானப் படையின் சின்னம் பதித்த கொடியினை போர்த்தி மலர் வளையம் வைத்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் குடும்பத்தினரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு நெசப்பாக்கம் மின் மயானாத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் அவரது ரசிகர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக நேற்று பல திரைப் பிரபலங்கள் டெல்லி கணேஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.