இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்டில் தோல்வியடைந்து தொடரை இழந்து விட்டது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரை இழந்திருந்தாலும் மூன்றாவது டெஸ்டிலாவது வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான வழிகளை இந்திய அணி மேற்கொள்ளும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது அதிலும் தோல்வியடைந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரின் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.
ரோஹித் ,கோலி, பந்த், கில், சர்பாராஸ் கான், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, சிராஜ் என சிறந்த வீரர்கள் இருந்தபோதிலும் ஒரு அணியாக செயல்படாமல் போனதால் சொந்த மண்ணில் ஒரு டெஸ்டை கூட இந்திய அணியால் வெல்ல முடியாமல் போனது. அந்த அளவுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நியூசிலாந்து அணி முதல் முறையாக இந்தியாவை அவர்களது மண்ணில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்த அணி என்ற பெருமையை பெற்றிருந்தது. இது தவிர இன்னும் பல சாதனைகளை மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி படைத்திருந்த நிலையில், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி, அவரது பேட்டிங், கோலியின் பேட்டிங், இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் என அனைத்துமே விமர்சனத்தை தான் சந்தித்து வருகிறது.
அப்படி ஒரு சூழலில் தான் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போட்டியிலும் தற்போது அதே இடத்தில் நடந்து முடிந்த போட்டியிலும் இருந்த சில ஒற்றுமையான விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இரண்டு முறை தான் 150 ரன்களுக்குள் இருந்த இலக்கு எட்டப்படவில்லை. அந்த இரண்டு போட்டிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் தான் நடைபெற்றுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 106 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.
ஆனால் அதனை கூட எட்ட விடாமல் ஆஸ்திரேலிய அணியை 93 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றியை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இருபது ஆண்டுகள் கழித்து அதே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் என்ற இலக்கை தொட முடியாமல் பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தது. அதே போல கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் நவம்பர் மூன்றாம் தேதி ஆரம்பமாக, தற்போது முடிந்த டெஸ்ட் போட்டி நவம்பர் 3 ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தான் 2004 ஆம் ஆண்டு கவுதம் கம்பீர் அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து தற்போது தோற்ற இந்த போட்டியில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியில் ஒரு பங்கு வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.