இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது நாள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவே தெரிகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்திருந்தது. ஆரம்பத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் வில் யங் ஆகியோர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதனால் அந்த அணி இருந்த நிலைக்கு தாண்டி ஓரளவுக்கு சிறப்பான ஸ்கோரை எட்டி இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். முந்தைய போட்டிகளை போல சுழற்பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஒருமுறை தாக்கத்தை ஏற்படுத்த தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்திருந்தனர். முக்கியமான ஒரு டெஸ்ட் போட்டி என்ற போதும் கூட அவர்கள் ஆடாமல் போனது அதிக விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
84 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறி கொண்டிருந்த இந்திய அணியை கில் மற்றும் ரிஷப் பந்த ஆகிய இருவரும் இணைந்து மீட்டெடுத்திருந்தனர். ரிஷப் பந்த் அதிரடியான ஆட்டத்தை கையில் எடுக்க, 59 பந்துகளில் எட்டு ஃபோர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 60 ரன்கள் சேர்த்திருந்தார். அவருடன் இணைந்து தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை விளாசிய சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார்.
கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தரும் பொறுப்பை உணர்ந்து ஆட, 36 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்திலும் இருந்தார். இந்திய அணி 263 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் 28 ரன்கள் முன்னிலையும் வகித்திருந்தது. இதன் பின்னர் ஆடத் தொடங்கிய நியூஸிலாந்து அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் காண இரண்டாவது நாள் முடிவில் அவர்கள் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. 143 ரன்கள் முன்னிலை வகித்து வர 3 வது நாளில் ஒரு விக்கெட்டை வேகமாக எடுத்தால் இந்திய அணி வெற்றி பெறுவதும் எளிதாக இருக்கும்.
இதனிடையே பத்து ரன்களில் தனது டெஸ்ட் சதத்தை நியூசிலாந்துக்கு எதிராக தவறவிட்டதன் காரணமாக ஒரு முக்கியமான சாதனையை பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளார் சுப்மன் கில். 90 ரன்களில் கில் அவுட்டாக, அவர் 100 ரன்கள் அடித்திருக்கும் பட்சத்தில் முதல் இந்திய வீரராக நியூசிலாந்துக்கு எதிராக மூன்று வடிவிலும் சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றிருக்கலாம்.
ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் சதமடித்துள்ள கில், டெஸ்டில் 10 ரன்களில் அந்த வாய்ப்பை தவற விட்டு முதல் இந்திய வீரராக நியூசிலாந்துக்கு எதிராக சரித்திரம் படைக்கும் வாய்ப்பையும் இழந்து விட்டார்.