Sleeping Problem and Solution : பல இடங்களில் மக்கள் பலரும் பரபரப்பாக பணிபுரிந்து வரும் நிலையில் தூக்கம் என்பது மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. காலையில் கண் திறக்கும் நேரம் முதல் இரவு தூங்குவது வரை வேலை என்றும் இன்னொரு பக்கம் குடும்பத்தை பார்த்துக் கொள்வது என்றும் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு தூக்கம் ஒன்று மட்டும் தான் மிகப்பெரிய ஒரு நிவாரணமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தூக்கத்தை பலரும் மிக சரியாக மேற்கொள்கிறார்களா என்று கேட்டால் நிச்சயம் பெரிய கேள்விக்குறி தான்.
பணப் பிரச்சனைகள், குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் என பலருக்கு தூக்கம் என்பது எட்டாத ஒரு கனியாகவே இருந்து வருகிறது. எப்படியாவது நிம்மதியான ஒரு தூக்கத்தை மேற்கொண்டு பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்று நினைத்தாலும் இரவு நேரத்தில் அது மண்டைக்குள் ஓடி அவர்களை ஒரு மாதிரியாக செய்து விடுகிறது.
இன்னொரு புறம் பலருக்கும் வேலை உள்ளிட்ட விஷயங்களில் மிக தீவிரமாக மூழ்கி இருப்பதன் காரணமாக அவர்களால் அதிக நேரம் தூங்க முடியவில்லை என்ற பிரச்சனையும் உள்ளது. ஒருவர் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்கியாக வேண்டும் என்ற நிலையில் இங்கிருக்கும் பலரும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை தான் தூங்கி வருகின்றனர். சாப்பாடு, தூக்கம் உள்ளிட்ட விஷயங்கள் மிகச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பல நாட்கள் கழித்து மிகப்பெரிய பிரச்சனைகளையும் அவர்கள் சந்திப்பார்கள்.
அப்படி ஒரு சூழலில் தான் படுத்தவுடன் தூங்குவதற்கான ஒரு சிறப்பான டிப்ஸ் ஒன்றைப் பெண் ஒருவர் கொடுத்துள்ளார். இது தொடர்பாக எமிலி என்ற பெண் ஒருவர், இரண்டு நிமிடத்தில் தூங்குவதற்கான ஆலோசனையை கொடுத்துள்ளார். அதன்படி முதலில் ஒருவர் கட்டிலில் படுத்ததும் நல்ல மூச்சை இழுத்து விட்டபடி கண்ணை மூடிக் கொள்ள வேண்டும். அத்துடன் தங்களுக்கு நல்ல பழக்கமான ஒரு வீட்டை முதலில் நினைத்து கொள்ள வேண்டும். அது அவர் தங்கும் வீடாக இருக்கக் கூடாது.
அந்த வீட்டின் கதவை திறந்து அங்கிருக்கும் மேஜை, சோஃபா என ஒவ்வொரு சிறிய பொருளாக இருந்தாலும் அதனை நாம் நினைத்து கவனம் செலுத்தி கொண்டே இருக்கும் பட்சத்தில் மிக குறுகிய நேரத்திலேயே தூக்கம் வந்துவிடும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் படி, நாம் தூங்கும் நேரத்தில் நமக்கு பிடித்தமான ஒரு இடத்தை நினைத்து எண்ணத்தை தெளிவாக்கும் போது நமது மனதில் இருக்கும் கவலைகள் மாறி அந்த இடத்தில் அதிக கவனம் செலுத்துவதும் அதில் இருக்கும் நினைவுகள் நம் மனதிற்குள் வந்து ஒரு விதமான உணர்வை கொடுத்துச் செல்லும் என அறியப்படுகிறது.
பலரும் தூக்கமில்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் நிச்சயம் இந்த முறையை முயற்சி செய்து பார்த்தால் பலன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதும் தெரிய வரலாம்.