கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புதிய மோசடி மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதையும் பார்ப்போம்.
முதலில், இந்த “டிஜிட்டல் அரெஸ்ட்” என்பது அப்பாவி மக்களை மட்டுமே டார்கெட் செய்வார்கள் என்பதையும், தங்களை அரசுத்துறையின் அதிகாரிகள் போல் அடையாளம் காட்டிக் கொண்டு, நீங்கள் சட்டத்துக்கு புறம்பான வேலையை செய்ததாகவும், அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் நீங்கள் அரெஸ்ட் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி பயமுறுத்துவார்கள்.
இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு UPI மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்று நிர்பந்தம் செய்வார்கள். அப்பாவி மக்கள் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்து பணம் அனுப்பிவிட்டால், அதன் பிறகு தான் அது மோசடி என்பது தெரியவரும்.
இந்த மோசடியில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை பார்ப்போம். பொதுவாக, விசாரணை அதிகாரிகள் எந்த காரணத்தை முன்னிட்டு பணம் அல்லது வங்கி சார்ந்த விவரங்களை கேட்க மாட்டார்கள். மோசடியாளர்கள் தான் உடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார்கள். அவர்களது வேகத்தை பார்த்து, இது மோசடி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி நிலைமையில் பயம் இல்லாமல், மோசடி நபர் எந்த துறையில் இருந்து பேசுவதாக கூறுகிறாரோ, அந்த துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரத்தை கேட்டுக் கொள்ளலாம். மேலும், அரசு அதிகாரிகள் WhatsApp, Skype போன்ற அம்சங்களை பயன்படுத்துவதில்லை. உண்மையாகவே வழக்குப்பதிவு செய்திருந்தால், நேரில் வந்து தான் விசாரணை செய்வார்கள்.
மேலும், தெரியாத எண்ணில் இருந்து, குறிப்பாக இன்டர்நெட் அழைப்பில் இருந்து அழைப்பு வந்தால், அந்த அழைப்பை துண்டிக்கவும். வங்கி சார்ந்த விவரங்களை எந்த காரணத்தை முன்னிட்டு பகிர வேண்டாம். மோசடி என்று சந்தேகம் இருந்தால், உடனடியாக காவல்துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் செய்யவும். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், மோசடியாளர்கள் இடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.