உடலும், உயிரும் இயங்குவதற்கு ஜீவாராதமாக இருப்பது காற்றும், நீரும், உணவுமே. ஒருமனிதன் காற்று இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழ முடியாது. அதேபோல் நீரின்றி சில நாட்கள் வாழலாம். வெறும் நீரை மட்டும் குடித்துக் கொண்டு சில மாதங்கள் வாழலாம். ஆனால் இப்போதுள்ள வாழ்க்கை முறையில் உணவுக்குச் செலவழிப்பதைக் காட்டிலும், மருத்துவமனைக்கே அதிகம் செலவழிக்கிறோம். காரணம் முறையற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் உடலுழைப்பின்மை.
இந்த மாதிரி உணவுகளை சாப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் போது மருத்துவமனைப் பக்கமே உங்களை அழைத்துச் செல்லாது. அவை எந்தெந்த உணவுகள் தெரியுமா?
முளைவிட்ட கோதுமையை சாப்பிடும் போது புற்றுநோயின் தாக்கம் குறையும். மேலும் முளைவிட்ட பயிர்கள் அதிக புரதச் சத்து கொண்டதால் விளையாட்டு வீரர்களுக்கும், கடின உடலுழைப்பு செய்பவர்களுக்கும் அமிர்தமாக இருக்கும்.
முளைவிட்ட எள்ளு எடுத்துக் கொண்டால் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் தேறும். முளைவிட்ட பச்சைப் பயிறு சாப்பிடும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், மேலும் மூட்டு வலியும் நீங்கும். முளைவிட்ட கருப்பு உளுந்து தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும்.
தேங்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கப் பயன்படுகிறது. தேங்காயை பச்சையாகச் சாப்பிடும் போது கொழுப்பு கிடையாது. ஆனால் சமையலில் பயன்படுத்தும் போது கொழுப்பாக மாறுகிறது. மேலும் நல்லெண்ணையைக் காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், மிளகு இவைகளை இடித்து ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து உச்சந்தலையில் தேய்த்து பின்னர் எண்ணைக் குளியல் எடுக்கும் போது உடல்வலி, தசைவலி, உடல் சூடு ஆகிவற்றிற்குச் சிறந்த மருந்தாக அமைகிறது.
முகத்தில் தழும்புகள் இருப்பின் ஆலிவ் எண்ணையை தினசரி தடவி வர நாளடைவில் தழும்புகள் மறைந்து முகம் பளபளக்கும். பழக்கடைகளில் சப்ஜா விதையானது அரு மருந்தாக அமைகிறது. இதை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வரும் போது சிறுநீர் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாகிறது. ஜீரணப்பாதை புண், நெஞ்செரிச்சல் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.
சோற்றுக் கற்றாழையை இரண்டாகப் பிளந்து அதில் சிறிது வெந்தயத்தை உள்ளே வைத்து விடுங்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை தேங்காய் எண்ணையில் போட்டு தலைக்குத் தேய்த்து வர நரைமுடி கருப்பாகும்.
இப்படி தமிழ் மருத்துவக் குறிப்புகள் ஏராளமாக உள்ளன. இவைகளைக் கடைப்பிடித்து வந்தாலே என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாம்.