பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும், மாற்று அரசியலை நாடும் மக்களுக்கு மத்தியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசியது 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வியூகம் வித்திட்டிருக்கிறது. மாநாட்டில் விஜய் தனது அரசியல் முன்னெடுப்பு குறித்தும், தங்களுடைய எதிரிகள் குறித்தும் அனல் பறக்கப் பேசினார்.
மாநாட்டில் விஜய் பேசும் போது, “நம்முடைய அரசியல் நிலைப்பாடு, கொள்கை யதார்த்தமானதாக இருக்க வேண்டும். மாற்று அரசியல், மாற்று சக்தி என்ற ஏமாற்று வேலையை இப்போது நாம் செய்யப் போவதில்லை. ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளில் பத்தோடு பதினொன்றாக மாற்று அரசியல் என்று சொல்லிக் கொண்டு எக்ஸ்ட்ரா லக்கேஜாக நான் இங்கு வரவில்லை.
நம் நாட்டிற்குக் கேடு செய்து, இன்னும் நிறைய வேலைகளை ஈஸியாக செய்து கொண்டு, மக்கள் மத்தியில் தங்களை பெரிய சக்திகளாக நினைத்துக் கொண்டு மிகப்பெரிய ஏமாற்று சக்திகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை முழுமையாக மாற்றும் ஒரு முதன்மை சக்தியாக இருந்து உங்கள் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக உங்களில் ஒருவனாக இருந்து நான் உழைக்க வேண்டும். இதுதான் என்னுடைய இலக்கும்.
எதையும் யோசித்துதான் செயல்படுவேன். ஒருமுடிவோடு தான் வந்திருக்கிறேன். பின்வாங்க மாட்டேன். இந்த முடிவு நான் தனிப்பட்டு எடுத்தது கிடையாது. நாம் எடுத்த முடிவு. எதற்கும் தயாராக தைரியமாக நிற்கும் இந்த மாபெரும் சக்தி எடுத்த முடிவு. இந்தக் கூட்டம் குடும்பமாகச் சேர்ந்து கொள்ளையடிக்க வந்த கூட்டமல்ல, ஏமாற்ற வந்த கூட்டமல்ல, அதிகாரத்தைக் கையில் ஏந்தி பழி தீர்க்க வந்த கூட்டமல்ல, பக்கா திட்டத்தோடு, மக்கள் விருப்பத்தோடு வந்த கூட்டம்.
சும்மா இந்த உதார் விடுற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது.. தவெக மாநாட்டில் விஜய் பேச்சு..
இது ஏதோ சோஷியல் மீடியாவில் கம்பு சுத்த வந்த கூட்டம்ன்னு நினைச்சுறாதீங்க.. சமுதாயத்தை வாழ வைக்க கையில் வாளேந்தி வந்த கூட்டம். நம் மண்ணை வாழ வைக்க அரசியல் வாளேந்தி வந்த கூட்டம். இது மாஸ் கூட்டம். சோஷியல் மீடியாவில் டிரோல் செய்வது, ஆபாசம், அல்லுசில்லு, இந்த பயோஸ்கோப் காட்டுறது. இந்த ஏ டீம், பி டீம் இப்படியெல்லாம் பொய் பிரச்சாரம் செஞ்சு இந்தப் படையை வீழ்த்திடலாம்ன்னு நினைச்சுறாதீங்க.. இங்க நீங்க பார்க்குறது மட்டும் நம் சொந்தம்னு நினைச்சுறாதீங்க.. நம் சொந்தம் உறவு நட்பு இன்னும் இருக்காங்க.. இங்க வரமுடியாம பக்கத்து மாநிலத்துல இருக்கவங்க ஏன் உலகம் முழுக்க இருக்க கோடிக்கணக்கானவங்க குடும்பமா சேர்ந்து காத்துக்கிட்டு இருக்காங்க.
ஏதாச்சும் நல்லது செஞ்சுற மாட்டாங்களா, தமிழ்நாட்டைப் பற்றி அதோட வளர்ச்சியைப் பற்றி ஒரு ஏக்கத்தோட பார்க்குற நம் மக்கள ஏமாத்துற இந்த ஊழல் கபடதாரிகள நாம ஜனநாயகப் போர்க்களத்துல சந்திக்கிற நாள் வெகு தூரத்துல இல்ல. 2026-ல தேர்தல் கமிஷன் ஒரு நாள் குறிக்கும்ல. அந்த நாளில் தமிழ்நாட்டில் இருக்கிற 234 தொகுதிகளிலும் தவெக சின்னத்துக்காக அழுத்தபோற ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக மாறும்.” இவ்வாறு விஜய் அனல் பறக்கப் பேசினார்.