Vijay Maanadu: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை கடந்த சில ஆண்டுகளாக பிடித்து வைத்துள்ள விஜய், அந்த இடத்தை தியாகம் செய்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில், அவர் அரசியலிலும் தனது வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டு, நிச்சயம் ஒரு நாள் உச்சத்துக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
விஜய் என்ற நடிகர் அரசியலுக்கு திடீரென வரவில்லை என்பதற்கான சான்றாக, கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, சமூக சேவைகள் செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மக்களின் கவனத்தைப் பெற்றுவருகிறார். அது மட்டுமின்றி தலைவர்களின் சிலைக்கு மரியாதை, சமூகப் பிரச்சினைக்கு அவ்வப்போது குரல் கொடுத்தல், தலைவர்களின் பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிப்பது போன்ற செயல்களும் மக்களை கவர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி, கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தி, தற்போது தேர்தல் ஆணையத்திலும் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் பிரமாண்டத்தைப் பார்க்கும் போது, ஒரு புதிய அரசியல் கட்சியால் நடத்தும் நிகழ்வு போல் இல்லை; ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்து வரும் கட்சி தான் மாநாடு நடத்துகின்றது என்று தோன்றுகிறது.
அதிமுக மாநாடு என்றால் பெரிய எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களின் கட்டவுட்டுகளும், திமுக மாநாடு என்றால் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி போன்றவர்களின் கட்டவுட்டுகளும் இருக்கும். ஆனால், விஜய் வித்தியாசமாக தமிழன்னை, அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார், சேர சோழ பாண்டியர் மற்றும் பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு கட்டவுட்டுகள் வைத்திருப்பதைப் பார்த்து, நடுநிலை வாக்காளர்கள் விஜய் பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளையும் மக்களுக்கு தரும் வாக்குறுதிகளைப் பற்றி தெளிவாகக் கூறினால், அவர் அரசியலில் நல்ல இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக சினிமா நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும் போது தங்களுடைய ரசிகர்களை மட்டுமே நம்பி கட்சி ஆரம்பித்தனர். சிவாஜி கணேசன், சரத்குமார், விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் கட்சி ஆரம்பித்த நிலையில், சில ஆண்டுகளில் அவர்கள் ரசிகர்கள் கூட ஆதரவு தர முடியாத நிலையில் அந்த கட்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், விஜய் தனது ரசிகர்களை மட்டுமின்றி இளைஞர்களை, குறிப்பாக முதல் முறை ஓட்டு போடுபவர்களை இலக்காகக் கொண்டு அரசியலுக்கு வந்திருப்பதால், அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக, திமுக என மாறி மாறி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. மக்களுக்கு வேறு வாய்ப்பு இல்லாததால், இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்து வருகின்றனர். புதிதாக ஆட்சிக்கு வருபவர்களும் முதலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால், விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற செல்வாக்குள்ள நடிகர்களும் பின்னாளில் திராவிடக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டதால் நம்பகத்தன்மையை இழந்தனர். அந்த வகையில், விஜய் அந்த தவறை செய்யாமல் மக்களுடன் கூட்டணி வைத்தால், 2026 தேர்தலில் எதிர்க்கட்சியாகவும், 2031 தேர்தலில் ஆளுங்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் இதே அக்டோபர் மாதம் தான் அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சி ஆலமரம் போல் பரந்து விரிந்து தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த சாதனை படைத்த கட்சியாக மாறி உள்ளது. அதே அக்டோபர் மாதத்தில் தான் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை விஜய் நடத்துகிறார் என்பதால் எம்ஜிஆர் வெற்றி விஜய்க்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே ரஜினிகாந்த் சொன்னது போல் திமுக மற்றும் அதிமுக கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமான கட்சியாக இருந்தாலும் இன்னும் ஒரு வெற்றிடம் இருப்பது உண்மைதான். புதிய தலைமுறைக்கான ஒரு தலைவர் தமிழகத்தில் தோன்றவில்லை என்ற வெற்றிடத்தை விஜய் நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே பலர் முயற்சித்தும் இரு திராவிட கட்சிகளிடம் எடுபடாமல் போன நிலையில் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் விஜய் தன்னை வெளிப்படுத்துவார் என்றும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்த மாநாடு ஞாயிறு போல் ஓளிரட்டும் என்றும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்
விஜய் என்ற பெயருக்கு வெற்றி என்ற அர்த்தம் இருப்பதால், சினிமாவில் மாபெரும் சாதனை செய்துவிட்டார். அரசியலிலும் அதே சாதனை செய்தால், உண்மையில் தமிழகத்தில் ஒரு அரசியல் புரட்சி ஏற்படும். விஜய் தமிழக அரசியலில் எந்த விதமான மாற்றத்தை செய்யப் போகிறார்? அவரது முதல் மாநாட்டின் தாக்கம் மக்கள் மத்தியில் எப்படி இருக்கும்? அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவும் தருவார்கள், சிக்கலையும் தருவார்கள், அவர் அதை எப்படி அணுகுவார்? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.