சமீபத்தில் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட இந்தி தின விழாவில் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்..” என்ற வரியானது விடுபட்டது பெரும் சர்ச்சையானது. ஆளுநருக்கு எதிராகவும் பல கண்டனக் குரல்கள் எழுந்தன. மேலும் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடாதது சர்ச்சையானது. இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படி தமிழ்த்தாய் வாழ்த்தே கடந்த வாரம் முழுவதும் ஹாட்டாபிக்காக மாறிய நிலையில் சிறுவயதிலிருந்தே பள்ளியில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் கேட்டு கேட்டு பழகிய நிலையில் நிகழ்ச்சிகளில் அதனைச் சரியாகப் பாடாதவர்களால் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இதுஒருபுறம் இருக்க, பள்ளி ஒன்றில் தேசிய கீதம் ஒலித்த போது அங்கே பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த பெயின்டர் ஒருவர் வாளியில் குச்சியைப் பிடித்தவாறே சிலைபோல் அசையாமல் நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை அளித்து தனது தேசப்பற்றை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
டோல் கேட்டில் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ஏன்.. எப்போது தெரியுமா? கசிந்த தகவல்..
ஏற்கனவே அத்தொழிலாளி மிகுந்த சிரமப்பட்டு பக்கவாட்டுச் சுவற்றின் மீது பிடிமானம் எதுவும் இல்லாமல் சற்று ஆபத்தான வகையில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது இறைவணக்கக் கூடத்தில் வழக்கம் போல் தேசிய கீதம் ஒலிக்க திடீரென பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தவர் கையில் குச்சியைப் பிடித்தவாறே அப்படியே நின்றார்.
இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட தற்போது பெயின்டரின் தேசபக்தியைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். படித்து உயர்பதவியில் இருப்பவர்களே தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் தவறாகப் பாடி அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பெயின்டரின் தேசபக்தி அவர்களுக்குத் தகுந்த பாடமாக அமைந்திருக்கிறது.