டோல் கேட்டில் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ஏன்.. எப்போது தெரியுமா? கசிந்த தகவல்..

By John A

Published:

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் நாடு முழுக்க நான்கு வழிச்சாலைகள், எட்டுவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு விரைவாகச் செல்லும் வகையில் பயண நேரம் பல மணி நேரம் குறைக்கப்படுகிறது. மேலும் கனரக வாகனப் போக்குவரத்திற்கும் நான்கு வழிச்சாலைகள் மிக ஏற்றதாக உள்ளது.

முதன் முதலாக வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரச் சாலைத் திட்டம் உருவாக்கப்பட்டு நாடு முழுக்க முதன் முதலாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பமானது. அதன்பின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விரிவடைந்து தற்போது மீண்டும் பா.ஜ.க.ஆட்சியில் ஒவ்வொரு இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் நான்குவழிச்சாலைகள் போடப்பட்டுள்ளது.

இந்த சாலைகள் அமைப்பதற்கான பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரிலையன்ஸ், டாடா, எல் அன் டி போன்ற நிறுவனங்களுக்கு வழங்கியது. சாலை அமைக்கத் தேவையான நிதியை அச்சாலை போடப்பட்ட 15 ஆண்டுகளுக்கு சுங்கவரி அல்லது சேவைக் கட்டணமாக வசூலித்துக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதியளித்ததை அடுத்து நாடு முழுக்க டோல்கேட் எனப்படும் சுங்கச் சாவடிகள் நிறுவப்பட்டன.

இப்படி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சுங்கச் சாவடிகள் உள்ளது. சுங்கச் சாவடிகளில் இந்த சாலையைப் பயன்படுத்த குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இதனால் ஒவ்வொரு முறையும் வாகனங்கள் கட்டணம் செலுத்தி விட்டுச் செல்வதால் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கால விரயம் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பாஸ்ட் டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரீசார்ஜ் செய்து கொண்டால் சுங்கச் சாவடியை கடக்கும் நேரங்களில் காத்திருக்க அவசியம் இன்றி தானாகவே கியூ ஆர் கோடு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்தது.

இந்நிலையில் சில நேரங்களில் சுங்கச் சாவடியைக் கடக்கும் போது நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற நெரிசல் ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வாகனங்களை இலவசமாக அனுமதிக்கலாம் என சுங்கச் சாவடி ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மட்டுமே இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாகத் தெரிகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் வரை வாகனங்களில் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் விரைவாக சுங்கச் சாவடியைக் கடக்கலாம்.