பங்குச்சந்தை வர்த்தகத்தில் தற்போது பலவிதமான வர்த்தக முறைகள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகம் என்பதும், இதில் ஏராளமான இந்தியர்கள் தற்போது ஈடுபட்டு பணத்தை இழந்து வருவதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈக்யூடிட்டி என்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது, கமாடிட்டி என்ற தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவது மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது என பல வகையான வர்த்தக முறைகள் உள்ளன.
அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக F&O என்ற ப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் வர்த்தகம் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. பொதுவாக, “இந்தியர்கள் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள்” என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் அதிக ரிஸ்க் உள்ள இடங்களில் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
குறிப்பாக கொரோனா காலத்தை தொடர்ந்து, இந்தியர்கள் F&O வர்த்தகத்திற்கு அடிமையாகி விட்டதாகவும், வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சிறு வர்த்தகர்கள் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும், அவர்கள் 90% வரை நஷ்டம் அடைகின்றார் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், அவர்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்து கொண்டிருப்பது சரியானது அல்ல என்றும், F&O வர்த்தகம் பொழுதுபோக்காக அல்லது சூதாட்டமாக இருக்க கூடாது என்றும், நேரடி பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் வழியாக முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு பலனளிக்கும் நல்ல முதலீடு என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகின் ஒட்டுமொத்த F&O வர்த்தகத்தில் இந்தியா 50 சதவீதத்திற்கு மேல் வர்த்தகம் செய்கிறது என்றும், இது இந்தியாவுக்கு பெருமை இல்லை என்றும், இதனால் ஏராளமான நஷ்டம் தான் வருகிறது என்றும் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த வர்த்தகத்தில் நிபுணராக இருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும், “கிட்டத்தட்ட சூதாட்டம்” என்று கூறப்படும் F&O வர்த்தகத்தில் ஈடுபடாமல், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பாதுகாப்பான வர்த்தகத்தில் ஈடுபடுவது சிறந்தது என்று முதலீட்டு ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.