இஸ்லாமிய பக்திப் பாடல்களிலும், திமுகவின் அரசியல் பிரச்சார மேடைகளிலும், சில திரைப்படங்களிலும் இந்தக் குரல் எப்போதுமே தனித்துத் தெரியும். ஓடி வருகிறார் உதய சூரியன் என்று கனீர் குரலில் பாடும் போதும், இறைவனிடம் கையேந்துங்கள் என்று மனமுருகிப் பாடும் போதிலும் இசை ரசிகர்களைக் கவர்ந்திழுப்பவர் நாகூர் ஹனிபா. இசைஞானி இளையராஜா திரைப்படங்களில் இசையமைப்பதற்கு முன்பாக முதன் முதலாக வாய்ப்புக் கேட்டது நாகூர் ஹனிபாவிடம் தான். அவருடன் ஏராளமான கச்சேரிகளில் பணியாற்றியிருக்கிறார் இளையராஜா.
நாகூர் ஹனிபாவின் தனித்துவ குரலை அறிந்திருந்த இயக்குநர் பாலுமகேந்திரா தனது படத்தில் பயன்படுத்த விரும்பினார். அந்த வகையில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த திரைப்படம் தான் ராமன் அப்துல்லா.
இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக வாலியின் வரிகளில் நாகூர் ஹனிபா பாடிய உன் மதமா..? என் மதமா..? ஆண்டவன் எந்த மதம் பாடல் இன்றும் சமய நல்லிணக்கப் பாடலாக பல இடங்களில் ஒலிக்கிறது.
பிரம்மாண்டமாக தயராகும் தவெக மாநாட்டு மேடை.. ஆளுயர கட்அவுட்.. பாராகிளைடிங் என எல்லாமே ஹைடெக் தான்..
இந்தப் பாடலைப் பாடுவதற்கு முன்பாக நாகூர் ஹனிபா இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பாடலுக்கான காட்சியை கேட்டபின், படத்தின் தலைப்பு என்னவென்று கேட்க, பாலுமகேந்திரா அப்துல் ராமன் என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட நாகூர் ஹனிபா தலைப்பினை மாற்ற முடியுமா என்று கேட்டிருக்கிறார். ஏன் என்று பாலுமகேந்திரா கேட்க, அப்துல் என்பது அடிமை என்பதனைக் குறிக்கும் சொல்லாகும். எனவே பின்னால் ராமன் என்ற பெயர் சேர்க்கும் போது அது சரியாக இருக்காது என்று கூறியிருக்கிறார்.
அதனை ஏற்றுக் கொண்ட பாலுமகேந்திரா சிறிது நாட்கள் கழித்து படத்தினை தலைப்பினை ராமன் அப்துல்லா என்று மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.