ஒரு நிமிஷம் கூட என்னால இங்க இருக்க முடியல.. ஆடுஜீவிதம் பட பாணிபோல் கத்தாரில் கதறும் தமிழர்

அண்மையில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கத்தில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு வெளியான திரைப்படம் தான் ஆடு ஜீவிதம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இத்திரைப்படம் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கு அடிமைகளாகி…

Aadu Jeevitham

அண்மையில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கத்தில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு வெளியான திரைப்படம் தான் ஆடு ஜீவிதம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இத்திரைப்படம் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கு அடிமைகளாகி பாலைவனப் பகுதிகளில் ஒட்டகம் மேய்ப்பது, ஆடுகள் மேய்ப்பது போன்ற இக்கட்டான சூழலில் சிக்கி தப்பிக்கும் ஓர் இளைஞனின் வாழ்க்கையை மையமாகத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் பிருத்விராஜின் நடிப்பும் வெகு சிறப்பாக இருந்தது.

இந்நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் கதையைப் போன்றே கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற தமிழர் ஒருவரின் நிலை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைளதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி வேல் என்ற இளைஞர் கத்தார் நாட்டில் டிரைவர் வேலைக்காகச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு சென்றவுடன் அவருக்கு டிரைவர் வேலை தராமல் ஆடு ஜீவிதம் படத்தில் வருவது போன்று ஓர் பாலைவனப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே சுமார் 300-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

தங்க நகைக்கடன்களில் பெரும் மோசடி.. ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

அவர் நினைத்தது போலவே அவரை அந்த ஒட்டகங்களை மேய்க்கச் சொல்லியிருக்கின்றனர். மேலும் அங்குள்ளவர்களுக்கு சமைத்துப் போடுவது என அவரை அடிமைப்படுத்தி வேலை வாங்கியிருக்கின்றனர். இதுமட்டுமல்லாது சக்திவேலுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. பாலைவனத்தில் மண்தரையில் தான் படுத்துறங்கியிருக்கிறார். மேலும் பாம்புத் தொல்லையும் அதிகமாக இருந்திருக்கிறது.

என்னை இந்தியாவிற்கே அனுப்பிவிடுங்கள் என்று அங்குள்ளவர்களிடம் முறையிட்ட போது அவர்கள் இவரை அழைத்துச் செல்வது போன்று காரில் ஏற்றி சுமார் 10கி.மீ தாண்டி இறக்கி விட்டு மீண்டும் பாலைவனத்தில் நடந்து வரச் சொல்லியிருக்கின்றனர். மேலும் உடல்நலம் குன்றிய ஒருவரை சக்திவேல் இருக்கும் பகுதியில் விட்டுவிட்டு அவரையும் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கின்றனர். இப்படி பல சித்ரவதைக்கு ஆளான நிலையில் சக்திவேல் வீடியோவாக எடுத்து அதில் தன்னைக் காப்பாற்றும்படியும், ஒரு நிமிடம் கூட தன்னால் இங்கு வாழ முடியவில்லை எனவும், மீண்டும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுங்கள் எனவும் முறையிட்டிருக்கிறார்.

ஆடுஜீவிதம் படத்தில் வருவது போல் நிஜமாகவே இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவித்து வரும் சக்திவேலைக் காப்பாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.